Saturday, January 25, 2014

கருத்துப் பரிமாற்றம்....

கண்ணனின் கின்னஸ் சாதனை

25 ஜனவரி 2014 இல் 11:41 AM
என்னைக் கவர்ந்த நண்பர் Babu PK அவர்களின் சிந்தனைகள்.

தனிமதி என்பாரின் பதிவு:

கண்ணனின் கின்னஸ் சாதனை 

கின்னஸ் புத்தகம் இருக்கிறது. ''அரை மணி நேரத்தில் ஆயிரம் இடியாப்பம் சாப்பிட்டு சாதனை படைத்தேன், ஐந்தே நிமிடத்தில் அரைப்பானை ஐஸ்கிரீமை வயிற்றில் அடைத்து விட்டேன்,'' என்றெல்லாம் அதில் எழுதச் சொல்கிறார்கள். சாதனை செய்பவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்களே! ஆனால், கடவுளின் சாதனையின் முன் நம் சாதனைகள் வெறும் தூசு தான். யார் அந்தக் கடவுள் தெரியுமா? வெண்ணெய் திருடி, மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட நமது கண்ணன் தான்.

குரு�க்ஷத்திர யுத்தம் போல இனியொரு யுத்தம் நடக்கப்போவதில்லை. யுத்தகளம் என்றால் சாதராண இடமல்ல அது. 70மைல் நீளம், 30மைல் அகலமுடையது அந்தக்களம். இந்தக்களத்திலே தான் ஒரு நொடியை ஐந்தாகப் பிரித்து அதன் நான்கு பகுதிக்குள் 18 அத்தியாயங்கள், 700 ஸ்லோகங்கள் கொண்ட பகவத்கீதையை சொல்லி முடித்தார். பகுத்தறிவுள்ள யாராவது ஒருவன் இதை நம்புவானா எனக் கேட்கலாம்.

இதன் உட்பொருளை உணர்ந்து கொள்ள வேண்டும். கேட்பவன் சரியானவனாக இருந்தால், சொல்லிக் கொடுப்பவனுக்கு கவலையில்லை. ஆசிரியர் சொல்லித்தரும் பாடத்தை முதலிலேயே கவனித்து விட்டால், வீட்டில் வந்து படிக்கவே தேவையில்லை. அப்படியே மனதில் ஆகி விடும். அது போலத்தான் அர்ஜூனன். அவன் மிகப் பெரிய ஞானி. அந்த ஞானியின் ஞானத்தை கண்ணன் தூண்டி விடுவதற்கான நேரமே இது.மிக இலகுவாக கண்ணனின் கருத்துக்களை புரிந்து கொண்டான். போரில் வெற்றியும் பெற்றான். 

உணவு எளிதில் ஜீரணமானால் மனிதனின் உடல்நிலை நன்றாக இருக்கும். இதனால் தான் பீமனுக்கு 'விர்க்கோதரன்' என்ற பெயர் உண்டு. 'விர்க்கோதரம்' என்றால் 'எளிதில் ஜீரணமாகுதல்' எனப் பொருள். ஜீரணமாகி விட்டால் உடலில் அதிக பலம் ஏற்படும். அதுபோல புரிந்து கொள்ளும் தன்மை அதிகமாக உள்ளவர்களே வாழ்வில் வெற்றி பெறுவார்கள். இதனால் தான் அதீத புத்தியுள்ள அர்ஜூனனை தேர்ந்தெடுத்து கண்ணன் கீதையை உபதேசித்தான். 

கீதையில் இல்லாத கருத்துக்களே இல்லை. முக்கியமாக கீதை பயத்தை போக்குகிறது.

''உன் குடும்பத்தோடு ஒட்டும் உறவும் வைப்பதால் தான், உனக்கு பயமே ஆரம்பமாகிறது என்கிறது கீதை. நீ பிறக்கும் போதே நிச்சயிக்கப்பட்ட மரண தேதியுடன் தான் பிறந்து வந்துள்ளாய். எனவே, ஒருநாள் நீ உன் சுற்றத்தாரை விட்டு பிரியத்தான் போகிறாய். அவர்களைப் பிரிந்து விட்டால், உன் குடும்பமே தெருவுக்கு வந்து விடுமோ என பயப்படுகிறாய். இந்தக் கவலையை ஒழிக்கும் பக்குவம் கிடைக்குமா? நிச்சயம் கிடைக்கும். நீ பகவானை மட்டுமே தியானம் செய். போதும். என்னை விட்டு விடாதே,'' என்கிறார் பகவான் கிருஷ்ணர்.


''குதஸ்த்வா கஸ்மலமிதம் விஷமே ஸமுபஸ்திதம்!அனார்யஜூஷ்டமஸ் வர்க்யப கீர்த்தி கரமர்ஜூன!!''


என்பது கீதையில் பகவான் சொல்லும் ஸ்லோகம்.


இதன் பொருள் என்ன தெரியுமா?

''அர்ஜூனா! பாமரர்களால் மேற்கொள்ளத்தக்கதும், சொர்க்கத்தின் கதவை அடைப்பதும், அபகீர்த்தியை தருவதுமான மோகத்தை எங்கிருந்து நீ பெற்றாய்?'' என்பது தான்.

மோகத்தை விட்டுவிடு, பாசத்தை வேரறுத்து விடு, பணத்தின் மீது பற்று வையாதே,'' இதுதான் பகவான் கிருஷ்ணன் சொல்லித் தரும் பாடம். முயற்சி செய்யுங்களேன். கீதையின் இந்த வரிகளைப் பின்பற்ற.

'கஸ்மாலம்' என்றால் என்ன? : பகவத்கீதையின் இரண்டாவது அத்தியாயம் இரண்டாவது ஸ்லோகத்தில், 'கஸ்மல' என்ற வார்த்தை வருகிறது. 'கஸ்மலம்' என்றால் 'மோகம்' என்று பொருள். இந்த வார்த்தை திரிந்து 'கஸ்மாலம்' ஆகிவிட்டது. நமது சென்னை மக்கள் இதை, 'திட்டும்' வார்த்தையாக பயன்படுத்துகிறார்கள். 'மோகம் கொண்டவனே' என்று இதற்கு பொருள்.

தை அமாவாசை தீர்த்தங்கள்: தை அமாவாசை வரும் 21ம் தேதி வருகிறது. தீர்த்தம் ஆட ராமேஸ்வரம், வேதாரண்யம், கன்னியாகுமரி ஆகிய தலங்களுக்கு அடிக்கடி சென்று வந்திருப்பீர்கள். இம்முறை தாமிரபரணியின் நீர் வீழ்ச்சிகளான கல்யாணி தீர்த்தம், பாண தீர்த்தம், அகத்தியர் தீர்த்தம் ஆகிய தீர்த்தங்களுக்கு சென்று வாருங்கள்.

பாண தீர்த்தம்: தாமிரபரணியின் முதல் தீர்த்தமான பாணதீர்த்தம் வானத்தில் இருந்து விழுவதைப் போன்ற தோற்றமுடையது. எனவே இதை வான தீர்த்தம் என்றும் சொல்வர். அம்பிலிருந்து புறப்பட்ட பாணம் போல் அருவி கொட்டுவதால் இப்பெயர் ஏற்பட்டது. இங்கிருந்து 2 கி.மீ.,தொலைவில் சொரிமுத்தையனார் கோயில் உள்ளது. சாஸ்தா கோயில்களில் இதுவே முதன்மையானது என்பர். தாமிரபரணி ஆற்றின் நடுவே கோயில் உள்ளது. கோயிலைச் சுற்றி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். இங்கு, தை மற்றும் ஆடி அமாவாசைகளில் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுவர். சிறப்பு பூஜைகள் உண்டு. இங்கு தர்ப்பணமும் செய்யலாம்.

கல்யாணி தீர்த்தம்: பாபநாசத்திலுள்ள லோயர்டேம் எனப்படும் நீர்மின்நிலையப் பகுதியை ஒட்டி, கல்யாணி தீர்த்தம் அமைந்துள்ளது. இதைக் கண்டு களிக்க மண்டபம் கட்டப்பட்டுள்ளது. வெள்ள காலங்களில் இந்த அருவி பார்ப்பதற்கு மிக பயங்கரமாக இருக்கும். இதை பார்த்தாலே பாவங்கள் தொலையும் என்பது நம்பிக்கை.

மனிதனுக்குள் உயர்வு தாழ்வு இல்லை என்ற கருத்தை உலகோருக்கு வலியுறுத்த, சிவபெருமான் தனது திருமணத்தின் போது உலகை ஒருபுறமாக சரியச் செய்தார். இந்த ஏற்றத்தாழ்வை போக்க, அகத்தியர் பொதிகைக்கு அனுப்பப்பட்டார். அவருக்கு திருமணக்காட்சி கொடுத்த இடமே கல்யாணி தீர்த்தம்.

அகத்தியர் அருவி: கல்யாணி தீர்த்தத்தின் தண்ணீர் அடர்ந்த பாறைகளைக் கொண்ட ஆற்றின் வழியே சென்று, அகத்தியர் அருவி என்ற பெயரில் விழுகிறது. இந்த அருவியில் மக்கள் ஆபத்தின்றி குளிக்கலாம. அமாவாசை தர்ப்பணத்தை இந்த அருவிக்கரையில் செய்து வருவது மிகவும் சிறப்பு.

பாபநாசம் படித்துறை: தாமிரபரணி நதியில், கங்கை ஆண்டில் ஒருமுறை வந்து மூழ்குவதாக பாபநாசம் தலபுராணம் சொல்கிறது. பாபநாசம் பாபநாசநாதர் கோயிலில், சித்திரை முதல் நாள் இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்படுகிறது. பாவங்களைச் சுமந்து வரும் கங்கை, தாமிரபரணியில் தனது பாவத்தை தொலைத்துக் கொள்கிறது என்பது ஐதீகம். பாபநாசத்திலுள்ள பாபநாசநாதர் சிற்பம் ருத்ராட்சத்தால் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. இவரை வணங்கினால், ஆன்மிக உணர்வு அதிகரிக்கும். நோய்கள் நீங்கும்.

செல்லும் முறை: சென்னை, மதுரை, கோவையிலிருந்து செல்பவர்கள் திருநெல்வேலி சென்று, அங்கிருந்து 45 கி.மீ., தொலைவில் உள்ள பாபநாசத்தை ஒன்றரை மணி நேரத்தில் அடையலாம். பாபநாசத்தில் இருந்து அமாவாசையை ஒட்டி சிறப்பு பஸ்கள் அகத்தியர் அருவி, கல்யாணி தீர்த்தம், சொரிமுத்தையன் கோயில் வரை செல்லும். இங்கிருந்து 2 கி.மீ., நடந்தோ, பஸ்களிலோ, காரையார் செல்லலாம். இங்கு தாமிரபரணி அணை இருக்கிறது. அணைக்குள் செல்லும் படகுகளில் சென்றால், பாண தீர்த்தத்தை அடையலாம். இங்கு ஓரமாக நின்று நீராட கம்பித் தடுப்பு உண்டு. மிகக்கவனமாக நீராடி விட்டு, காரையாரில் இருந்து புறப்படும் பஸ்களில் பாபநாசம் திரும்பலாம். பாபநாசம் பாபநாசநாதர் கோயில் முன்பு தாமிரபரணியில் கம்பித்தடுப்பு எல்கைக்குள் நின்று, மிகக்கவனமாக நீராடி விட்டு, தர்ப்பணம் முடித்து ஊர் திரும்பலாம்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நான்:எனது கருத்துக்கள் பல்வேறு வகைகளில் மாறுபடுகின்றன இங்கு. ஆனால் பதிவதற்குத் தயக்கமாக உள்ளது. எனது வார்த்தைகள் பண்புடன் இருந்தாலும், மற்றவர்களின் அடிப்படை, ஆழ் நம்பிக்கைகளைச் சற்று அசைத்துப் பார்க்கும் என்பதால் யாரும் விரும்ப மாட்டார்கள். ஆயினும், நான் முன்பே குறிப்பிட்டவாறு பிளேட்டோவின் குகைமனிதனாக இருப்பது கடினம். ஆன்மிகத்தைப் பரப்புவது சரி எனில், பகுத்தறிவைப் பரப்புவதும் சரியாகத்தான் இருக்கவேண்டும்.

கண்ணனின் சாதனைகளை நாம் செய்ய முற்பட்டால் இந்தச் சமுதாயம் ஏற்றுக்கொள்ளுமா?திருடுதல் சாதனையா? யாரோ ஒருவன் நம் வீட்டுப் பெண்களை கோபிகைகளாகக் கருதிச் சீண்டினால் நாம் பொறுத்துக்கொள்வோமா?

மகாபாரதத்தைப் பொறுத்தவரை கண்ணன் முரண்பாடுகளின் மொத்த உருவமாகத் தெரிகின்றான். தான் ஒருபக்கமும் தன் படை மறுபக்கமும் இருந்து போரிடுவது எங்ஙனம்? கீதையின் தான் கூறுபவற்றைக் கிஞ்சித்தேனும் தனது வாழ்வில் கடைபிடித்தேனாயின் இல்லை.

குருட்சேத்திர யுத்தம் என்று ஒன்று நிகழ்ந்ததா என்பதே சந்தேகத்திற்குரியது.18 அக்குரோணிப் படைகள் நின்றதாகக் கூறப்படுகின்றது,ஒரு அக்குரோணி (Akshauhini) என்பது21,870 இரதங்கள்,21,870 யானைகள்,65,610 குதிரைவீரர்கள்109,350 காலாட்படையினர்.

ஒரு இரதத்திற்கு இருவர் எனக்கொண்டால்,
21,870 x 2 = 43,740 நபர்கள்

ஒரு யாணைக்கு இருவர் எனக் கொண்டால்,
21,870 x 2 = 43,740 நபர்கள்

ஒரு குதிரைக்கு ஒரு வீரன் எனக் கொண்டால்
65,610 x 1 = 65,610 நபர்கள்

109,350 காலாட்படை நபர்கள்,

ஆக மொத்தம்,
43,740 + 43,740 + 65,610 + 109,350 = 262,440 நபர்கள்,

18 அக்குரோணி படைக்கு 262,440 x 18 = 4,723,920 நபர்கள்.

இவர்கள் யுத்தத்தில் பங்கெடுத்தவர்கள் மட்டுமே, இவர்களுக்கு உதவி செய்ய இன்னும் பலர் இருந்திருப்பர், யுத்தத்தில் பங்கெடுக்காதோரும் இருந்திருப்பர், பெண்கள் குழந்தைகளும் இருந்திருப்பர், நாட்டு மக்களும் இருந்திருப்பர் என்று கணக்கெடுத்துப் பார்த்தால் அக்காலத்தில், அதாவது மகாபாரதம் நிகழ்ந்ததாகக் கூறப்படும் காலத்தில் இவ்வளவு மக்கள் தொகை இருந்திருக்குமா?

குருட்சேத்திரம் என்பது இத்தனை நபர்களைக் கொண்ட படையணிகளை நிறுத்தும் அளவிற்குப் பெரிய திடலா?

கேள்விகள் நம் சிந்தனைக்கே....

அது என்ன சொல்லிவைத்தமாதிரி பெரும்பாலான ம(ட)த நூல்கள் எல்லாம் ஒரு விடயத்தைச் சொல்வதற்கு முன்பாகவே, இது உங்களுக்குப் புரியாது, அல்லது மிகுந்த அறிவிருந்தால் மட்டுமே புரியும், அல்லது கடவுள் மீது முழு நம்பிக்கை இருந்தால்தான் புரியும் என்று சொல்லுகின்றனவே....?

எனக்கு ஒரு திடைப்படக் காட்சி நினைவிற்கு வருகின்றது. தமிழின் நகைச்சுவை நடிகர் வடிவேலு அவர்கள் ஒரு திரைப்படத்தில், கடவுளைக் காட்டுவதாகக்கூறி ஊர்மக்களிடம் பணம் வசூலித்துவிடுவார். ஒரு மலையைக் காட்டி அதோ கடவுள் தெரிகிறார் என்றதும் ஊர் மக்கள் விழிப்பார்கள். எவனெவன் மனைவி பத்தினியோ அவன் கண்களுக்கு மட்டுமே கடவுள் தெரிவார் என்றும் கூறிவிடுவார். உடனே எல்லோரும் ஆம் எனக்கு கடவுள் தெரிகிறார் என்று கூவுவார்கள். வேறு வழி...?

கீதையைப் படியுங்கள் பின் பெருமை பேசுங்கள், படிக்காமல் பெருமை பேசுதல் வேண்டாமே. கண்ணனின் வாழ்க்கை வரலாறாகக் கூறப்படுவதை முழுமையாகப் படியுங்கள். பின்னர் அவன் பெருமை பேசலாம்.

அது என்ன தர்ப்பணம்? நாம் அந்தணர்க்கு கொடுக்கும் பண்டங்கள் நமது முன்னோர்களுக்குப் போய்ச்சேருவதாக அர்த்தமா? என் தாத்தா என்னைச் சிறுவயதில் நன்றாக அடிப்பார். இப்பொழுது நான் அவரை அடிக்க விரும்பினால் அந்தணர்களை அடித்தால் என் தாத்தாவிற்குப் போய்ச் சேருமா?

ஒரு கதாகாலட்சேபம், உன் சகோதரிக்குப் பிறக்கும் எட்டாவது குழந்தையால் உனக்கு மரணம் என கம்சனுக்கு அசரீரி ஒலித்ததாம், அதனால் தன் சகோதரியையும் அவளது கணவரையும் சிறையில் தள்ளி, அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளைக் கொன்றுவிட ஆணையிட்டான் கம்சன் என்று ஒருவர் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்.

அங்கிருந்த சிறுவன் ஒருவன் கேட்டானாம், "அதுதான் எட்டாவது குழந்தையால் மரணம் என்று தெரிந்துவிட்டதே, பின்னும் ஏன் அவர்கள் இருவரையும் ஒன்றாகச் சிறையிலடைத்தான் கம்சன்?"

அவன் காதைத் திருகி, அதிகப்பிரசங்கி என்ற வசைமொழியோடு வீட்டிற்கு அனுப்பியிருப்பார்கள்.

அச்சிறுவன் கேட்டதுபோல் இன்று நாம் யாரும் கேட்பதில்லையே ஏன்? 

தசாவதாரம் என்றொரு திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் நாயகன் ஒரு கருத்துச் சொல்வார், "கடவுள் இல்லை என்று கூறவில்லை, இருந்தால் நன்றாக இருக்கும் என்றுதான் நானும் கூறுகிறேன்" என்பார். நாம் எல்லோருக்கும் நம் அடிமனதில் ஒரு தனியாத இச்சை ஒன்று உண்டு. திடீரென்று ஒரு அதிசயம் நிகழ்ந்து நாம் உலகப் புகழ் பெறமாட்டோமா என்றோ அல்லது ஓரிரவிலேயே உலகப் பணக்காரராக மாறிவிடமாட்டோமா என்று பல.

எனக்கும்கூட ஒரு பெரிய ஆசை (பேராசை?!) ஒன்றுண்டு. ஓரிரவில் உறங்கி விழிக்கும்பொழுது இப்பிரபஞ்சத்தின் அத்துணை இரகசியங்களும் என் மூளைக்குள் பொதிந்து வைக்கப்படமாட்டாதா என்று...

ஆனால், அது சாத்தியமில்லை என்பதை உணர்ந்தோமானால் நாம் எதார்த்த வாழ்விற்கு திரும்பிவிடலாம். அல்லது ஒருவித மயக்கத்தில் ஆழ்ந்து கடவுள், அருள், சக்தி என்று நமக்கு நாமே பல தோற்றங்கள் கற்பித்துப் பின் அதனையே உண்மை என நம்பி விடும் சாத்தியக்கூறுகள் அதிகம்.

எனது சிறுவயதில் என்னைச் சிறப்பித்துக்கூறும் வகையில் ஒரு பொய்யை ஒரு நண்பனிடம் கூற, அதை அவன் இன்னும் சிலரிடம் கூற, அவர்கள் என்னிடம் வந்து உண்மையா எனக் கேட்க, நானும் முதலில் கூறிய பொய்யை மறைக்க ஆம் என்று கூறி அதனை உண்மைப்படுத்தும் வகையில் இன்னும் சில பொய்களைக் கூற, இறுதியில் நான் முதலில் கூறிய பொய் உண்மையாகவே நிகழ்ந்ததாக என் மனம் எண்ண ஆரம்பித்துவிட்டது. (மிகப்பெரிய வாக்கியமாக அமைந்துவிட்டது போலும்...)

இப்பொழுது நினைத்தால் கூட அதனை எண்ணி வெட்கப்படுகின்றேன். ஆக மனித மனம் மிகவும் மென்மையானது அதே சமயம் மிகவும் வன்மையானது. இருபக்கம் கூர்மையுள்ள கத்தி போன்றது. மிகக் கவனமாகக் கையாள வேண்டியிருக்கின்றது.

தாங்கள் கூறும் கிருட்டிண பக்தர் மாற்றுக்கருத்துக்கள் தருவாராயின் மிக்க மகிழ்ச்சியடைவேன். அவர் போற்றும் கீதை கூறும், மாற்றம் ஒன்றே தன் இயல்பில் மாறாதது (Paradox-முரண்தொடர்) எல்லாவற்றிற்கும் பொருந்துமா எனவும் வினவவும். 


சுகந்தி:
வணக்கம் பாபு.

நான் நினைக்கிறேன் நீங்கள் ஒரு இந்து சமயத்தவர் என்று. காரணம் நான் பார்த்தளவில் மற்ற சமயத்தவர்கள் எப்போதும் தமது சமயத்தை விட்டுக் கொடுத்துப் பேசியதில்லை. பகுத்தறிவு விஞ்ஞான வளர்ச்சி எல்லாம் சொல்லலாம். ஆனாலும் மனிதனால் பூகம்பம் நில நடுக்கம் சுனாமி இவைகளைத் தடுக்க முடியவில்லையே. நாளை என்ன நடக்கும் என்று அறிய முடிவதில்லையே. படிக்கும் போது ஒன்றை நினைத்துப் படிக்கிறோம்.ஆனால் வேறு ஒரு துறையில் வேலை பார்க்கிறோம்.நம் முன்வினைப் பயன்கள் கூட நம் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன.அதனால் தான் நல்லதையே செய் ,நல்லதையே நினை என்பதை அடிக்கடி வலியுறுத்துகின்றன.ஒன்றை வாசிக்கும் போது நாம் எடுக்கும் கோணத்தைப் பொறுத்தது.

அரிச்சந்திரன் கதையை ஒரு ஆசிரியர் மாணவர்களுக்கு சொல்லிக் கொண்டிருந்தாராம். அதன் நோக்கம் உண்மையே பேசுங்கள் என்பது.ஆனால் ஒரு மாணவன் சொன்னானாம் இப்படி கஷ்டப்பட்டதை விட பேசாமல் அவர் ஒரு பொய்யைச் சொல்லியிருக்கலாம் என்று.நான் நினக்கிறேன் மக்களை நல்ல வழியில் கொண்டு செல்லவே இது போல பல கதைகள் உருவாக்கப்பட்டதென்று.எங்கே எதைப் படித்தாலும் எமக்குத் தேவையான, உடன்பாடான விடையங்களை எடுத்துக் கொண்டு மற்றவற்றை விட்டு விடலாம்.

பகுத்தறிவு என பலர் சிந்திக்கத் தொடங்கியதால் தான் இன்று பல‌ குடும்பங்கள் விவாகரத்தில் வந்து நிற்கின்றன. 


நான்:
பார்த்தீர்களா சுகந்தி... நமது பார்வைகளை.....

அடுத்தவரை நாம் புரிந்துகொள்ளாததற்கு, நாம் அவரை ஏதேனும் ஓர் இடத்தில் இருத்திவைத்துப் பார்ப்பதும், இவர் இப்படித்தான் போலும் என்ற பார்வையில் பார்ப்பதுமே ஆகும்.

நான் தேநீர் அருந்துவதில்லை என்று கூறினேனானால், நான் தேநீர் அருந்துவதில்லை என்பது மட்டுமே நான் தங்களுக்கு வெளிப்படுத்தும் கருத்து. தாங்களாகவே நான் குளம்பிதான் (Coffee) அருந்துவேன் என்றோ அல்லது அருந்தக்கூடும் என்றோ கற்பனை செய்துகொள்வது எவ்விதத்தில் நியாயம்?

நான் பகுத்தறிவு குறித்துப் பேசுவதால் என்னை நாத்திகன் என்று கருதி அதே பார்வையில் பார்ப்பதையோ, இந்து மதத்தின் குறைபாடுகளைக் குறித்துப் பேசுவதால், அம்மதத்தவர்க்கு எதிரானவன் என்று கருதுவதையோ நான் விரும்பவில்லை.

எந்த அடையாளங்களையும் சுமப்பதில் எனக்கு உடன்பாடில்லை, நான் தமிழன் என்பதைத் தவிர. எனக்கு விருப்பமின்றியே, என் சமுதாயமும், அரசாங்கமும் என்னைச் சான்றிதழில் ஒரு சமயத்தவனாகக் குறித்துள்ளதே தவிர, நான் ஒரு சிறந்த மனிதானகவே வாழ்ந்து மடிய ஆசைப்படுகின்றேன்.


//நான் பார்த்தளவில் மற்ற சமயத்தவர்கள் எப்போதும் தமது சமயத்தை விட்டுக் கொடுத்துப் பேசியதில்லை//

சமயமே பொய் என்கின்றேன், இதில் விட்டுக்கொடுப்பது என்பது எங்ஙனம்?

காவி தரித்தவன் கடவுளில்லை, பகுத்தறிவாளன் என்போன் இயற்கையை வெல்லும் விஞ்ஞானியுமல்ல. இயற்கையை வெல்ல முடியவில்லை என்பது எதார்த்தம், நீங்கள் கூறும் கடவுள் என்றாவது அவ்வியற்கையின் போக்கை மாற்றியதாக வரலாறு கண்டீரா? பின் எங்ஙனம் பகுத்தறிவாளன் அச்செயலைச் செய்திருக்கவேண்டும் என எண்ணுகிறீர்?


//நாளை என்ன நடக்கும் என்று அறிய முடிவதில்லையே. படிக்கும் போது ஒன்றை நினைத்துப் படிக்கிறோம்.ஆனால் வேறு ஒரு துறையில் வேலை பார்க்கிறோம்.நம் முன்வினைப் பயன்கள் கூட நம் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன.அதனால் தான் நல்லதையே செய் ,நல்லதையே நினை என்பதை அடிக்கடி வலியுறுத்துகின்றன.//

இயலாமை, விரக்தி, அறியாமை, குழம்பியதோர் சிந்தனை இவைகளை தங்கள் கூற்றுக்களில் காண்கின்றேன். ஆனாலும் வரவேற்கின்றேன், குழம்பிய நீரே தெளிவடையும்.

உலகின் உயிரினங்கள் அனைத்திற்கும் ஒரு பொதுவான அடிப்படையான குறிக்கோள் என்னவெனில், உயிர்வாழ்தல்(Survival), தன்னினத்தைப் பெருக்குதல்(Reproduction) என்பனவாம். மனிதர்களாகிய நாமும் இவற்றைய அடிப்படையாகக் கொண்டாலும், வெளியில் சிலபல பூச்சுக்களைக் கொண்டுள்ளோம், தவிர நாமும் ஒரு விலங்கினம்தான்.

நமது நடவடிக்கைகள், அது நல்ல வழியினதானாலும் சரி, தீய வழியினதானாலும் சரி, உயிர்வாழவேண்டிய தேவை கருதியே அமையும். இது மனிதனுக்கு மனிதன் வேறுபடவும் செய்யும். உயிர் வாழ ஒருவன் கொலை செய்யலாம், ஒருவன் திருடலாம், ஒருவன் உழைக்கலாம், ஒருவன் ஏய்க்கலாம்.... அடிப்படையில் எல்லாமே உயிர் வாழத்தான்.

மற்றபடி, முன்வினைப்பயன், பின்வினைப்பயன் என்பதெல்லாம் நமது செயல்களை நியாயப்படுத்திக்கொள்ளவும், நான் குற்றமற்றவன் என்பதைக் காட்டிக்கொள்ளவும்தான். கடவுள் கூற்று கூட அப்படித்தான். எந்தவொரு தவறான விளைவுகளுக்கும் பொறுப்பேற்க நாம் விரும்புவதில்லை, அது நம்மால் விளைந்திருந்தால்கூட. எனவேதான், கடவுள் மீதும், விதியின் மீதும் சுமத்திக்கொள்கிறோம். அவர்கள் நேரில் வந்து கேள்வி கேட்க இயலாது அல்லவா?

என்னைக் கேட்டால், அரிச்சந்திரன் ஒரு உண்மையான மனிதனாக இருந்திருப்பானாயின் அவனை ஒரு முட்டாள் என்றே கூறுவேன். தன் நிலை இழந்து, மனைவி மகனை விற்று, தான் உண்மையை மட்டுமே பேசுவேன் என்பது தனது தன்மூப்புத்தனத்தைக் (ego) காட்டுவதற்காகத்தானே அன்றி வேறொன்றுமில்லை.

கவனியுங்கள், அரிச்சந்திரன் வாழ்க்கை ஒரு புனைவாகக்கூட இருக்கலாம். புனைந்தவரின் சுய ஆதாயத்திற்கு நீங்கள் பலியாகிவிடாதீர்கள். உண்மை பொய் என்பது நிலையானது அல்ல, அது காலத்திற்கும், இடத்திற்கும், மனிதர்க்கு மனிதரும் வேறுபடும்.

"தன்னெஞ்சறிவது பொய்யற்க" என்பதே போதுமானதாகும். கண்ணால் காணாத அரிச்சந்திரனை நீங்கள் புகழ்வதாக இருந்தால் கண்ணால் காணும் என்னையும் புகழத்தான் வேண்டும். நான் பொய் பேசுவதில்லை, பொய் பேசுவதில்லை என்றால் பொய் பேசுவதில்லை என்று மட்டுமே பொருள்.

//பகுத்தறிவு என பலர் சிந்திக்கத் தொடங்கியதால் தான் இன்று பல‌ குடும்பங்கள் விவாகரத்தில் வந்து நிற்கின்றன.//

வேடிக்கையாக இருக்கின்றது. பகுத்தறிவு பேசாத குடும்பங்களில் விவாகரத்தே இல்லை என்கிறீர்களா அல்லது விகிதம் குறைவாக இருக்கிறது என்கிறீர்களா? 


சுகந்தி:
வணக்கம் பாபு. திரும்பவும் சில மாற்றுக் கருத்தோடு வந்திருக்கிறேன்.

//சமயமே பொய் என்கின்றேன்.//

சமயமே பொய் என்றால் ஏன் உலகெங்கும் ஆயிரக்கணக்காக கோயில்கள் ,தேவாலயங்கள், பள்ளி வாசல்கள் கட்டி வைத்திருக்கிறார்கள்.உங்கள் பெற்றோரும் பொய் என்றுதான் சொல்கிறார்களா?


//இயலாமை, விரக்தி, அறியாமை, குழம்பியதோர் சிந்தனை இவைகளை தங்கள் கூற்றுக்களில் காண்கின்றேன்.//

நான் நிறைய இந்திய சஞ்சிகைகள் படித்திருக்கிறேன். அதில் பட்டப் படிப்பு படித்து விட்டும் வேலை கிடைக்காமல் இருப்பவர்களைப் பற்றி வாசிக்கும் போது கவலையாக இருக்கும்.எவ்வளவு எதிபார்ப்போடு ஆவலுடன் படித்திருப்பார்கள்.

//முன்வினைப்பயன், பின்வினைப்பயன் என்பதெல்லாம் நமது செயல்களை நியாயப்படுத்திக்கொள்ளவும்.//

முன்வினைப் பயன் என்று ஒன்று இல்லாவிட்டால் ஏன் ஒரு குழந்தை ஒரு நேரப் பாலுக்கே வசதியில்லாமலும் இன்னொரு குழந்தை மித மிஞ்சிய பாலுடன் வசதியாக இருக்கும் இடத்தில் பிறக்கிறது. அதன் காரணம் என்ன? எல்லா உயிர்களும் சமமாகத் தானே பிறக்க வேண்டும்.சில குழ்ந்தைகள் பிறக்கும் போதே தாயோ அல்லது தந்தையோ இறந்து விடுகிறார்கள். அதுபோல் சில குழந்தைகள் பிறந்ததும் அந்த குடும்பத்திற்கு மள மளவென்று செல்வம் குவியத் தொடங்கி விடும்.


//பகுத்தறிவு பேசாத குடும்பங்களில் விவாகரத்தே இல்லை என்கிறீர்களா அல்லது விகிதம் குறைவாக இருக்கிறது என்கிறீர்களா?//


விகிதம் மிக மிக‌ குறைவாக இருக்கிறது.

காரணம் எமது முன்னோர்கள் எப்போதும் பெண்களே விட்டுக்கொடுத்துப் போக வேண்டும் என்று கூறுவார்கள்.பெண்களும் கூடுமானவரை அதையே பின்பற்றினார்கள். குடும்பங்களில் பிரச்சனைகள் குறைவாகவே இருந்தது.பகுத்தறிவு என்று பார்க்கும் போது அதில் நியாயம் இல்லைதான்.ஆணும் பெண்ணும் சரிசமம். ஆனால் யதார்த்தம் அதுவல்லவே. 



நான்:

வணக்கம் சுகந்தி, மாற்றுக் கருத்துக்களுடன் வரும் எவரையும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

சமயம், கடவுள் குறித்து எனது பெற்றோர் பொய் என்று என்னிடம் சொல்லியதில்லை என்பதால் அவற்றை மெய்யெனக் கொள்வது எப்படிச் சரியாகும். எனது பிராயத்திலிருப்பவர்களுக்கும் எனக்குமே சிந்தனையில் பெருத்த வேறுபாடுகள் இருக்கும்பொழுது,சற்றுக் காலத்தே பின்னால் இருக்கும் என் பெற்றோருக்கு என் காலத்தைய சிந்தனை இருக்க வாய்ப்பில்லை. மேலும், அவர்களது பெற்றோர்கள் அவர்களுக்குரைத்த மொழிகளை மீறும் துணிவும் இல்லாதிருக்கலாம். எது எப்படியோ, சிந்தனை என்பது தனித்த ஒன்று, என் பெற்றோர் வழியில் சிந்திப்பதென்றால்  நான் என்கின்ற என் தனித்த நினைவுக்குப் பொருளென்ன?


பட்டப்படிப்பு படித்துவிட்டும் வேலைகிடைக்காமல் இளைஞர்கள் இருப்பதற்கு சமூகக் காரணங்கள், அரசின் தவறான சில கொள்கைகளுமாகக் கூட இருக்கலாம். இதற்கெல்லாம் விதியைத் துணைக்கழைத்தால் எப்படி சுகந்தி...?


வசதியான இடத்தில் பிறப்பதும், வசதியற்ற இடத்தில் பிறப்பதும், மனிதர் பிறப்பதும், இறப்பதும் இயல்பான விடயங்கள். இது முன்வினைப் பயனால்தான் எனக் கூற எந்த ஆதாரமும் இல்லையே...? சரி, முன்வினைப்பயன் என்பதற்காவது ஏதேனும் சரியான, தெளிவான விளக்கம் உள்ளதா?

//பகுத்தறிவு பேசாத குடும்பங்களில் விவாகரத்தே இல்லை என்கிறீர்களா அல்லது விகிதம் குறைவாக இருக்கிறது என்கிறீர்களா?

விகிதம் மிக மிக‌ குறைவாக இருக்கிறது//

ஆகா, மாட்டிக்கொண்டீர்களா சுகந்தி...! இதற்காகத்தான் அந்தக் கேள்வியையே கேட்டேன். எப்படிக் கணக்கெடுத்தீர்கள்? ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் இங்கு செல்லாது என்பது தெரியும்தானே?

பெரும்பாலும் விவாகரத்து என்பது செருக்கு (கல்விச் செருக்கோ அல்லது செல்வச் செருக்கோ) கொண்ட நபர்கள் ஒன்றிணைக்கப்பட்டால் விளைவது என்று எனது அனுபவத்தில் கண்ட கருத்தாகத் தாழ்மையுடன் பதிவு செய்கின்றேன். இதில் ஆண் பெண் என வேறுபாடுகள் கிடையாது.

நம்மிடம் எவ்வளவுக்கு எவ்வளவு கல்வியும் செல்வமும் சேர்கின்றதோ அதே அளவிற்குப் பணிவும் சேரவேண்டும். இல்லையெனில் கடினம்தான்.

எல்லோர்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.(குறள்-125) 

என்பது உட்பட அடக்கமுடைமை என்ற அதிகாரத்தில் கூறப்பட்டவைகள் அனைத்தும் நம் வாழ்க்கைக்குத்தாம்.

ஆக, தாங்கள் சிந்திக்கின்றீர்கள் ஆனால் ஒருமுகமாக. அதில் கிடைக்கும் விடைகளே போதுமானது எனத் திருப்திபட்டுக் கொள்கிறீர்கள். ஆனால், பன்முகமாக சிந்திக்கும்பொழுது குழப்பங்களோடு மிகத் தெளிவான விடை கண்டடைவீர்கள்.

காஞ்சி சங்கராச்சாரியார் வாழ்வில் நடந்ததாக ஒரு குட்டிக்கதையொன்று படித்திருக்கின்றேன். மக்களுக்கு வழங்குவதற்காக லட்டுகள் தயாரித்து ஒரு அறையின் மையத்தில் குவித்து வைத்திருந்தனர். குறைந்தது இரண்டு நாட்களாவது அதனை மக்களுக்கு வழங்க காத்திருக்க வேண்டும் என்றொரு சூழ்நிலை. நிர்வாகிகளுக்கோ கவலை. எறும்புகள் வந்து மொய்த்துவிடுமே என்று. சங்கராச்சாரியார் கூறினாராம், அந்த லட்டுக் குவியலைச் சுற்றி சர்க்கரையைத் தூவிவிடுங்கள் என்று. இனிப்பின் வாசனைக்கு வந்த எறும்புகள் அந்தச் சர்க்கரையோடு நின்றுவிட்டனவாம். அதற்குப் பின் இருக்கும் லட்டு அவற்றின் சிந்தனையை எட்டவில்லையாம். நாமும் அதுபோல்தான் இருக்கின்றோம். வாழ்வின் சின்னச் சின்ன விடயங்களில் திருப்திபட்டுக்கொள்கின்றோம், அதற்குப் பின்னால் இருக்கும் பெரிய விடயங்கள் நமக்குத் தெரிவதில்லை என்று எடுத்துச் சொல்கின்றார். உண்மைதானே?


சுகந்தி:
வணக்கம் பாபு,எனது சில கேள்விகளை முன்வைக்கிறேன்.

//வசதியான இடத்தில் பிறப்பதும், வசதியற்ற இடத்தில் பிறப்பதும், மனிதர் பிறப்பதும், இறப்பதும் இயல்பான விடயங்கள். இது முன்வினைப் பயனால்தான் எனக் கூற எந்த ஆதாரமும் இல்லையே...?//

நீங்கள் சொல்வது போல் முன்வினைப் பயனால்தான் எனக் கூற எந்த ஆதாரமும் இல்லைத்தான். ஆனால் ஒரு குழந்தை புதிதாகப் பிறக்கும் போது வசதியான இடத்தில் பிறப்பதும், வசதியற்ற இடத்தில் பிறப்பதிற்குமான காரணம் என்ன? ஏன் இந்த ஓரவஞ்சனை? பிறக்கும் போது வசதியான இடத்தில் பிறப்பதும், வசதியற்ற இடத்தில் பிறப்பதும் யாரால் நிர்ணயிக்கப்படுகிறது.

//பட்டப்படிப்பு படித்துவிட்டும் வேலைகிடைக்காமல் இளைஞர்கள் இருப்பதற்கு சமூகக் காரணங்கள், அரசின் தவறான சில கொள்கைகளுமாகக் கூட இருக்கலாம். இதற்கெல்லாம் விதியைத் துணைக்கழைத்தால் எப்படி சுகந்தி...?//

பட்டப்படிப்பு படித்துவிட்டும் வேலைகிடைக்காமல் இருக்கும் இளைஞர்கள் ஏன் இந்தியாவில் பிறக்க வேண்டும். மேலை நாட்டில் பிறந்திருந்தால் கை நிறைய சம்பளத்துடன் வாழ்ந்த்திருக்கலாமே? இதை என்னவென்று சொல்லலாம்.அதைத்தான் விதி என்கிறோம்.

//விவாகரத்து என்பது செருக்கு (கல்விச் செருக்கோ அல்லது செல்வச் செருக்கோ) கொண்ட நபர்கள் ஒன்றிணைக்கப்பட்டால் விளைவது//

நான் பார்த்தளவில் நல்ல கல்வியறிவு செல்வம் உள்ளவர்கள் நல்ல பணிவுடன் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். நீங்களும் சந்தித்திருப்பீர்கள்.உண்மையான கல்வியறிவு மனிதனின் வாழ்வை வளப்படுத்தும்.செருக்கை ஏற்படுத்தாது. 


நான்:
சரி சுகந்தி,

நான் இதுவரை இம்முற்றத்தில் எனது சிந்தனையின் ஒரு முகத்தைத்தான் பதிவிட்டிருப்பேன், மற்றுமொரு சிந்தனை முகமும் உண்டு. அதில் நீங்கள் கேட்கும் கேள்விகளைப் போன்று பல கேள்விகள் எனக்குள் சுற்றிச் சுற்றி வந்து கொண்டுதான் இருக்கின்றன. முதல் முகம் விளைவுகளுக்கு எல்லாம் காரணம் தேடும், மறுமுகம் காரணம் என ஒன்று இருக்கின்றது எனக் கொண்டு அதனால் விளையக்கூடிய விளைவுகளைச் சிந்திக்கும்.

உங்களின் ஏன் ஏன் என்ற அந்தக் கேள்விகளுக்கு அது தான் இயற்கை என்றோ அல்லது அது அப்படித்தான் என்றோ பதில்கூறி நழுவி விட விரும்பவில்லை. அதற்கான விடையைத்தான் தேடிக்கொண்டிருக்கின்றேன். படைப்பில் ஏன் இந்த ஏற்றத்தாழ்வுகள்? இதனால் யாருக்கு என்ன பலன்? நாம் எதை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கின்றோம்? நாம் யார்? நமது குறிக்கோள்தான் என்ன? ஏன் நாம் எல்லோரும் மகிழ்ச்சியாக இல்லை? அடுத்தவரின் இன்பம் நம்மிடம் ஒட்டிக்கொள்ளும் அளவிற்கு, மற்றவரின் துன்பம் நம்மைப் பற்றிக்கொள்வதில்லையே ஏன்?

இவற்றிற்கெல்லாம் பகுத்தறிவு பதில் சொல்லிவிடாது. அதற்காக விதி, கடவுள் என்றொரு மடமையிலும் விழுந்து விடலாகாது. சிந்தனை, சிந்தனை அது ஒன்றுதான் விளக்கமளிக்கும் என்ற நம்பிக்கையில் சென்று கொண்டிருக்கின்றேன். கணித மேதை இராமானுசன் அவர்களுக்கு கணிதவிளக்கங்கள் கனவில்தான் வருமாம். ஜான் ஃபோர்ப்ஸ் நாஷ் (John Forbes Nash) என்பாருக்கும் யாரோ ஒருவர் கணிதவிளக்கம் தருவதாக ஒரு காட்சிப்பிழை தோன்றுமாம்(Hallucination). ஐன்ஸ்டைன் கூட Thought Lab என்று ஒரு பதம் குறிப்பிடுகிறார்.

மேலும் நான் எங்கோ யாரோ ஒருவர் கூறியதாகப் படித்த ஓர் செய்தி. நாம் இதுவரை கண்டுபிடித்த கண்டுபிடிப்புக்களெல்லாம் எங்கோ ஒரு இடத்தில் (Mind Space) இருந்தவைதானாம். இதுபோல் இன்னும் நிறைய இருக்கலாமாம். ஆனால் அவையெல்லாம் எல்லோருக்கும் தங்களைக் காட்டிக்கொள்வதில்லையாம். ஆப்பிள் கீழே விழுவது குறித்து யாரும் சிந்திக்கவில்லை, நியூட்டன் சிந்தித்ததில்விளைவாக புவியீர்ப்பு விசை தன்னை அவருக்குக் காட்டிக்கொண்டதாம். எனக்கும்கூட அப்படியொரு சிந்தனை உண்டு. அவ்வகையில் ஒருவேளை எனக்கும் விடை கிடைக்கலாம். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முயலும்போது எனக்குப் பைத்தியக்காரன் என்றொரு பெயரும் மக்களிடையே இருக்கலாம்... 


நிலா முற்றத்தில் 2010 பிப்ரவரி மாதத்தில் ஒரு பதிவினைத் தொடர்ந்து அமைந்த கருத்துப் பரிமாறல்கள்..

No comments:

Post a Comment