Thursday, January 23, 2014

பகுத்தறிவோம்

பகுத்தறிவோம்

13 பிப்ரவரி 2013 இல் 12:34 AM

என்னைக் கவர்ந்த நண்பர் Babu Pk அவர்களின் உரத்த சிந்தனையின் வெளிப்பாடு. 
நிலா முற்றம் (www. thamilworld.com) என்ற தளத்தில் 18.02.2010 அன்று நண்பர்களுக்காகப் பதிவிட்டது.
முதற்குறிப்பு
இப்பதிவில் இடம்பெறும், மேற்கோள்கள், எடுத்தாளப்படும் பகுதிகள் தவிர ஏனையவைகள் அனைத்தும் எனது தனிப்பட்டக்  கருத்துக்களே. எந்தவொரு தனிப்பட்ட மனிதரின் (பொதுவாழ்வு தவிர்த்த) தனிமனித வாழ்வினை விமரிசிக்கவோ, எந்தவொரு  தனிப்பட்ட மதக் காழ்ப்புணர்ச்சியை வெளிக்காட்டவோ, எவருடைய மனத்தையும் புண்படுத்தும் நோக்கமோ இன்றி, ஆபாசம்,  அருவருப்பான வார்த்தைப் பயன்பாடுகளின்றி இப்பதிவினை எடுத்துச் செல்லவே எனக்கு விருப்பம். தனிப்பட்ட பெயர்கள் வேண்டாம் பொதுமைகளிலேயே குறிப்பிடுவோம். என்னுடன் இயைந்து கருத்தாடும் நண்பர்களும்  இதனை கருத்திற்கொள்ள வேண்டுகிறேன்.

இப்பதிவு ஆராய்ச்சிக் கட்டுரையுமல்ல நோக்கமும் அதுவல்ல. வெறும் கருத்துப் பரிமாறல் மட்டுமே. எனவே, ஆதாரங்கள்  காட்டப்படலாம், ஆழ்ந்த விளக்கம் சிற்சில சமயங்களில் சாத்தியப்படாது. சொல்லாடுபவர்களும் அத்துணை தொலைவு செல்ல  வேண்டியதில்லை. நம் தினப்படி வாழ்க்கையில் கூட பகுத்தறிவிற்கு ஒவ்வாத நிகழ்வுகள் பலவற்றைக் கடந்து வருவோம். அவ்வவற்றையும்  இங்கு அலசி ஆராயலாம்.

சிறு சுயகுறிப்பு
இறைமறுத்தலில் இருந்து இறைத்தேடலில் இறங்கியிருக்கும் ஒரு பகுத்தறிவாளன் நான். பகுத்தறிவாளன் என்றவுடனே ஏதேனும்  இயக்கத்தினைச் சார்ந்தவன் என எண்ணிவிட வேண்டாம். பகுத்தறிவாளன் என்பது பொதுப்பதம். அறிவியலும், ஆன்மிகமும்  உண்மையை நோக்கிப் பயணிக்கும் இரு வேறு பாதைகள் என்பது எனது கருத்து. அவ்வகையிலேயே எனது எண்ணப்போக்குகளும்.  எல்லாம் தெரிந்தவர் என்று எவருமில்லை; ஏதுமறியாதவர் என்றும் எவருமில்லை. எனவே, என் கருத்துக்களில் தவறுகள் ஏதேனும்  இருப்பின், தங்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். கூடித் தெளிவோம்.

துவக்கம்
இங்கு நான் முன்வைக்கப்போகும் கருத்துக்களும், கேள்விகளும் பலருடைய அடிப்படை மற்றும் ஆழ்ந்த நம்பிக்கைகளைச் சற்று  உரசித்தான் பார்க்கும். ஏதோ தனிப்பட்டு அவர்களையே குறித்துக் கூறுவதாகக் கூடத் தோன்றும். தனித்த சிந்தனை இல்லையெனில்  அப்படித்தான் தோன்றும்.

ஓஷோ குறிப்பிடுவது போல், "மனிதன் நல்லவன்; ஆனால் மனிதர்கள் கெட்டவர்கள்". வள்ளலார் கூட  "தனித்திரு, விழித்திரு, பசித்திரு" என்றார். தனித்த சிந்தனை நம்மை மேன்மைக்கு இட்டுச் செல்லும். நமது ஆளுமை நமை  ஆளும். மற்றவருடன் நம்மை அடையாளப்படுத்திக்கொண்டால் மற்றவர் சிந்தனைகள் நம்மை ஆளும். ஒரு எடுத்துக்காட்டுத் தரவா ?  எந்தவொரு மனிதனும் தனியனாக எந்தவொரு பாதகச் செயலையும் செய்ய விரும்பக்கூடமாட்டான், ஆனால் தன்னை ஏதேனும் ஒரு  இயக்கத்திலோ, இனத்திலோ, மதத்திலோ அடையாளப்படுத்திக் கொண்டு அவன் செய்த அட்டூழியங்களை நாடறியும், நாமும்  அறிவோம்.

பகுத்தறிவு என்றவுடன் கடவுள் எதிர்ப்பு (மறுப்பு) என்றும், பகுத்தறிவாளன் என்றால் கடவுளை மறுப்பவன் என்ற எண்ணம் மட்டுமே  நம்மில் பலருக்கும் மேலோங்கியுள்ளது. அப்படியல்ல.

கலைஞர் கருணாநிதி கூறுவார், "ஆய்ந்தறிதல் வேண்டும், அதற்கேற்ற அஞ்சாமை வேண்டும், இன்றேல் சிந்தனையைச்  சிறையிலிட்டுக் கொடுமையைக் கோலோச்சச் செய்வதற்கு உடந்தையாகிவிடுவோம்."1

இங்கு ஆய்ந்தறிதல் என்ற பதத்தினைக் கவனிக்கவும். "எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப  தறிவு" என்ற குறட்பாவினை ஒரே வார்த்தையில் கூறுவதானால் ஆய்ந்தறிக எனலாம். அறிவும், பகுத்தறிவும் வேறு வேறல்ல,  அறிவது நம் தேவை, பகுத்தறிவு (பகுத்து+அறி) என்பது அறியும் வகை.

அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று எந்தவொரு நம்பிக்கையின் அடிப்படையில் செயல்படாமல் அறிவை, யுக்தியை தனக்கு கிடைத்த அனுபவங்களை வைத்து உண்மை என்ன என்று அறிய முயல்வதுதான்பகுத்தறிவாகும். (The belief that opinions and actions should be based on reason and knowledge rather than on religious belief of emotion.)

பகுத்தறிவின் மூலம் உண்மையை விருப்பு வெறுப்பின்றி தேடுவதும், அப்படித் தான் அறிந்த மட்டில் தான் உண்மை என்று தேர்ந்து கொண்டதை எந்த அச்சமும் இல்லாமல் வெளிப்படையாகக் கூறுபவனும், அப்படிக் கூறும்பொழுது வரும் எந்த எதிர்ப்பையும் உறுதியாக எதிர்த்து நிற்பவனும்தான் பகுத்தறிவுவாதி.

ஆயினும், பகுத்தறிவுவாதிகள் ஏன் இறைமறுப்பாளர்களாக, மதஎதிர்ப்பாளர்களாக மட்டுமே பார்க்கப்படுகின்றனர்? மனிதர்களை அடிமைப்படுத்துவதிலும், சுரண்டுவதிலும் பற்பல காரணிகள் (முதலாளித்துவம், நிறவேறுபாடு, பால்வேறுபாடு) இருந்தாலும் அவற்றின் தாக்கங்கள், பாதிப்புக்கள் உடனடியாகவே வெளிவந்துவிடும். அனைத்து மக்களாலும் குரல் கொடுக்கப்பட்டு, எதிர்க்கப்பட்டு தீர்வு காணப்படும்.

ஆனால், கடவுள் நம்பிக்கையும், மதநம்பிக்கையும் அப்படியல்ல. அது மெல்லக் கொல்லும் குயுக்தியான ஒன்று. மனிதரின் சுய சிந்தனையை மழுங்கடித்து, மதக்குருமார்களும், மதக்காவலர்கள் எனக் கூறிக்கொள்வோரின் வார்த்தைகளை ஏற்கும் அடிமைகளாக, ஏவலாளிகளாக மாற்றிவிடும். விளைவுகள் வெளிப்படையாகத் தெரியாது.

தெரிவித்தாலும் ஏற்றுக்கொள்ளும் சிந்தனைதான் இல்லாமற் போய்விட்டதே. இதுவரை நடந்த மதக் கலவரங்களில் எந்த மதத் தலைவராவது அல்லது அவரது குடும்பத்தாராவது களத்தில் இறங்கி சண்டையிட்டதுண்டா? பலியானது அப்பாவியும் ஏமாளியுமான சாதாரண மனிதர்கள்தானே? மதத்தலைவர் எவரேனும் கடவுளின் பெயரால் தீமிதிப்பதுண்டா? அலகு குத்திக் கொள்வதுண்டா? தன்னை வருத்திக் கொள்வது, பக்தி என்ற பெயரில் பக்தன் என்றுத் தன்னை அழைத்துக்கொள்ளும் சாதாரண மனிதன்தானே?

சாதாரண மனிதர்களால் உணர்ந்துகொள்ள இயலாத இந்தச் சூழ்நிலையில்தான் பகுத்தறிவுவாதியானவன் குரல் எழுப்புகின்றான். அவனது குரல் மட்டுமே தனித்து ஒலிப்பதால், அவன் காட்சியில் மையப்படுத்தப்படுகின்றான்.

"கடவுள் இல்லை என்று நான் கூறமாட்டேன், ஏனெனில் அதற்கான ஆதாரங்கள் என்னிடமில்லை;" என்று பகுத்தறிவு அறிஞர் ஒருவர் கூறியதாகப் படித்திருக்கிறேன் (அவரது கூற்றின் சிறுபகுதிதான் நினைவில் வந்தது). கடவுள் இருக்கிறார் என்று கூறினால் கூறுபவர் ஆதாரங்களைக் காட்டட்டும். முட்டையிலிருந்து கோழியா, கோழியிலிருந்து முட்டையா? விதை முதலா மரம் முதலா? என்ற வறட்டுக் கேள்விகள் வேண்டாம். விடை நமக்கும் தெரியாது, கேட்பவர்க்கும் தெரியாது. இதில் கடவுள் இருக்கிறார் என்று நிச்சயப்படுத்த எந்தவித ஆதாரமும் நமக்குக் கிடைக்கப்போவதில்லை. இல்லை என்று மறுப்பதற்கு ஆதாரம் ஏதும் தேவையில்லை. ஆனால் இருக்கின்றது என்பதற்கு நிச்சயமாக மழுப்பலற்ற ஆதாரம் காட்டித்தான் ஆகவேண்டும்.

சரி, அது என்ன பகுத்தறிவுவாதிகள் எல்லோரும் குறிப்பிட்ட ஒரு மதத்தினையே குறை கூறுகின்றனர்? அம்மதம் சகிப்புத் தன்மை கொண்டது, திருப்பித் தாக்காது என்ற எண்ணம்தானே என்றும் சிலரின் வாதமாக இருக்கின்றது.....

அடுத்த பதிவில் தொடர்கின்றேனே....?

அடிக்குறிப்புக்கள்
1. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் 40வது பட்டமளிப்பு விழாவில் கலைஞர் கூறிய மாணவர்களுக்கான அறிவுரையில் சிறுபகுதி.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
01.03.2010
இரண்டாம் பதிவு
அப்படி ஒரு மாயத் தோற்றம் தோன்றக் காரணம் அப்பகுத்தறிவாளர்கள் இருக்கும் இடமும், அங்கு அக்குறிப்பிட்ட மதத்தின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதும்தான், மற்றபடி எங்கெங்கெல்லாம் மூடப்பழக்கவழக்கங்களால் அர்த்தமற்ற பழமைகளினால் மனிதனின் சுயசிந்தனை மழுங்கடிக்கப்படுகின்றதோ ஆங்கெல்லாம் குரல் எழுப்பப்படும்.

மேலும், குறைகூறுபவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. மதம் என்றால் என்ன, கடவுள் என்றால் என்ன என்று அவர்களைச் சென்றடைந்த உண்மை அவ்வளவுதான். உண்மையில் ஏட்டில் உள்ளது வேறு. 

ஒரு சின்ன உதாரணம் மற்றும் கேள்விகள். நமது நண்பரொருவர் இருக்கின்றார். அவருக்கும் நமக்கும் கடந்த 5 ஆண்டுகளாகப் பழக்கம். அந்நண்பரும், பழகுவதற்கு இனிமையானவராக, நேர்மையானவராக, மிக மிக நல்லவராக நமது பார்வையில் தெரிந்து நம் குடும்பத்தில் ஒருவராகவே பழகிவருகிறார். ஒரு நாள் அவர் நம்முடன் அமர்ந்து உரையாடிக்கொண்டிருக்கும்பொழுது காவலர்கள் வந்து அவரைக் கைது செய்கின்றனர். மேலும், அவர் கொலைசெய்து கொள்ளையடித்திருப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். நாம் என்ன செய்வோம்...?

அவர் அப்படிப்பட்டவர் இல்லை, மிக மிக நல்லவர் என்றே வாதாடுவோம். ஆனால், அவர் தகுந்த சாட்சியங்கள் ஆதாரங்களுடன் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டுவிட்டால்....? அல்லது நாமே அவரைக்குறித்து விசாரித்து அறிந்துகொண்டால்...? இப்பொழுது அவரைப்பற்றிய நமது எண்ணம் எப்படி இருக்கும்?

பிறக்கும்போது நாம் ஏதும் அறியாதவர்களாகவே பிறக்கின்றோம். பிறக்கும்போது நமக்கு மதமும் தெரியாது, கடவுளும் தெரியாது. பிறப்பால் ஒருவனை இன்ன மதத்தவன் என்று முத்திரை குத்துவது அபாண்டம். அவன் வளரும் சூழ்நிலைதான், இந்தச் சமுதாயம்தான் அவனை அப்படி வார்த்தெடுக்கின்றது. அப்படி அறிமுகமான மதமும் கடவுளும் ஒரு சமயத்தில் நம்மை, நம் சிந்தனைகளைச் சுரண்டிக்கொண்டிருக்கின்றது என்று உணருவோமானால்...., இன்னமும் அதனைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருப்போமா அல்லது உதறிவிட்டு மனிதம் தேடுவோமா? கேள்விகள் அனைத்தும் நமது சிந்தனைக்கே.

ஆக, மதம் என்றும் மதநூல்கள் என்றும் நமக்குப் போதிக்கப்பட்டவைகள் அதன் ஒரு சிறு பகுதிதான். உண்மையில் அதில் குறைகள் அதிகம். சர்வ சக்தியுள்ள கடவுள் என்று ஒன்றிருந்து அது நம்மையும் படைத்து நமக்கு வழிகாட்டவும் வேதங்களை அருளியிருந்தால் அது எத்தன்மையானதாக இருக்கவேண்டும் என்று ஒரு சாதாரண படிப்பறிவில்லாத மனிதனால் கூட எடைபோட்டுவிடமுடியும். அப்படைப்பில் மக்கள் அனைவரும் சமம்தானே? எங்கிருந்து வந்தது மனிதருள் ஏற்றத்தாழ்வுகள்? இறைவனிடமிருந்தா ? இறைவன் அருளிய வேதங்களிலிருந்தா?

இருக்கலாம், வேதங்களில் சிலபல உண்மைகள் கோடி காட்டப்பட்டிருக்கலாம். மனிதகுலம் உய்ய வாழ்வியல் தத்துவங்கள் சொல்லப்பட்டிருக்கலாம். அவைகள் மனிதகுலத்தின் மேற்கொண்ட அக்கறையால் மேன்மையுள்ள சிலரால் படைக்கப்பட்டிருக்கலாம். ஆனால், அவைகளைத் திரித்து மதச்சாயம் பூசி, கடவுள் அருளியது என்று மக்களை அடிமைப்படுத்தும் கொடுமையை ஆதரிக்கலாமா? அணுவைத் துளைத்தேழ்கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள் என்றார் அவ்வையார் என்பதற்காக அவருக்கு அன்றே அணுவைத் துளைக்கும் அணுகுண்டுத் தொழில்நுட்பம் தெரிந்திருக்கிறது என்று பொருள் கொள்ள இயலுமா?

கடவுள் மனிதனைப் படைத்தானா?
இல்லை. கடவுள் தம் சாயலாக மனிதனைப் படைத்தான் என்றொரு வேதவரிகளைப் பிடித்துக்கொண்டு நாம் படைத்த கடவுள்கள்தான் எத்தனை எத்தனை!  சர்வசக்தியுள்ள கடவுளின் கைகளில் ஆயுதம் எதற்கு ? பல தலைகள், பல கைகள் பல கண்கள் எதற்கு? என்றாவது நாம் சிந்தித்திருப்போமா? பலவீனமான மனிதனால், தன்னைவிட பலசாலியான, தனது காலத்தில் ஏற்படும் ஆபத்துக்களைச் சமாளிக்கும் விதமான ஆயுதங்கள் தரித்த தன்னைவிட மேம்பட்ட ஒரு கற்பனையான ஒன்றைப் படைக்க முயற்சித்து, விரைவில் அதனையே நம்பவும் துவங்கிவிட்டான். காலப்போக்கில் மனித சமுதாயத்தில் இருக்கும் குடும்பச் சூழலையும் கடவுளர்களுக்குள் புகுத்திக்கொண்டான். கடவுள் ஒருவரே என்று மதங்கள் கூறுவது உண்மையெனில் எப்படி இத்தனை கடவுள்கள் உருவாக்கத்தை அவர் விட்டுவைத்தார்? அவர் எங்கே விட்டுவைத்தார், எல்லாம் இந்த மதக்குருமார்களின் யுக்திதான். மக்கள் பிளவுபட்டிருக்கும்வரை அவர்கள் பாடு கொண்டாட்டம்தானே. இதை அறியாத வரை நாம் மக்களல்ல வெறும் மாக்களே.

Facebook தளத்தில் Tamil Eelatamilan என்றொருவர் பதிந்திருந்த கேள்வியினைப் பாருங்கள். "ஏலம் தரும் உங்கள் இறைவன் கழுத்தில் தங்கச்சங்கிலி , பொன் ஆடை , காலுக்கு கீழ் உலக வங்கி அளவில் உண்டியல்... கையில் இருந்த 1 ரூபாயை அதில் போட்டு வந்தவன் குடிசையில் எல்லோரும் 2 நாளாய் பட்டினி... இறைவ எங்கே உன் தாராள மனசு?" நம் வாழ்வின் எதார்த்தம் தொனிக்கின்றதா?

ஆக, கடவுட்கோட்பாடு மனிதனின் மனம் சார்ந்தது, அதனை மதம் சார்ந்ததாக மாற்றியதன் மூலம் ஆதாயமடைபவர்கள் பலர், பாதிக்கப்படுவோர் மக்கள்.

மனிதனுக்கு மதம் எதற்கு?
இந்தியா மதச்சார்பற்ற நாடு என்று வெளியில் கூறிக்கொண்டாலும், மதத்தின் பெயரால் அரங்கேறும் அட்டூழியங்களை அதனால் தட்டிக் கேட்க முடியவில்லை. உலகின் ஒரே இந்து நாடு நேபாளம் என்ற பெருமை அந்நாட்டிற்கு. அப்பெருமையால் அந்நாடு சாதித்தது என்னவோ? அரபு நாடுகள் இசுலாமிய மதமும், அமெரிக்க ஏகாதிபத்தியம் கிறித்துவத்தைச் சார்ந்தும் இருக்கின்றன, இதில் அமெரிக்கா தனது பணத்தாளிலேயே We Trust in God என்று ஒரு வாசகம் கொடுத்துள்ளது. இது மனித உரிமை மீறல் இல்லையா? அந்நாட்டு மக்கள் அனைவரும் கடவுளை நம்புகிறார்களா? அம்மக்கள் விருப்பத்தோடுதான் அவ்வாசகம் தெரிவிக்கப்படுகிறதா? ஒரு மதத்தைச் சார்ந்து இருப்பதால் ஒரு நாட்டிற்கு என்ன பலன் கிடைத்துள்ளது, அல்லது ஒரு குறிப்பிட்ட மதத்தவர் மட்டுமே இருக்கும் நாட்டில் ஒருவருக்கொருவர் சண்டைசச்சரவுகள் இன்றி அன்போடு ஒத்து வாழ்கின்றனரா?

இதில், அவர்கள் எங்கள் மதத்தவரை மதம் மாற்றிவிட்டனர், இவர்கள் எங்கள் மதத்தவரை மதம் மாற்றிவிட்டனர் என்று சச்சரவு வேறு. புரிந்து கொள்ளுங்கள் எண்ணிக்கைகளில் மதமில்லை. எண்ணிக்கைகள் காட்ட மதம் ஒன்றும் அரசியல் கட்சியுமல்ல. மதக்காவலர் என்றும் யாரும் தேவையில்லை. ஒரு மதம் என்று ஒன்று இருந்து அது சரியென்று தோன்றினால் மக்கள் அவரவரே இணைந்துகொள்வர்.

மடமைகளைப் போதிக்கும் மதம் தேவையா?

அடுத்த பதிவில் தொடர்கின்றேனே....?

------------------------------------------------------------------------------------------------------------------------------------
09.11.2010
மூன்றாம் பதிவு


கடவுளின் தேவைதான் என்ன?

மனிதன் தோன்றிய நாற்தொட்டு அவனைச் சுற்றிலும் ஆபத்துக்கள் சூழ்ந்துதான் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் அவனுக்கு முன்னரே பல்வேறு மிருகங்கள் தோன்றியிருந்தன. எல்லாவற்றையும் கண்டு பயந்தான். அறியாமைதானே பயம். அன்று நெருப்பைக் கண்டு பயந்த மனிதன் இன்றுமா நெருப்பைக் கண்டு பயப்படுகின்றான்? அதனைக் கையாளும் அறிவு பெற்றுவிட்டதால் எச்சரிக்கையாகவும் அனாயசமாகவும் அதனைப் பயன்படுத்துவதைக் காண்கின்றோமே. இன்று நெருப்பிற்குரித்ததான கடவுள் உருவகம் தேவையற்றுப் போய் நெருப்பு நம் கட்டுப்பாட்டில் இருக்கும்பொழுது நாமே நெருப்பின் கடவுளாகத் தெரிகின்றோம்.
அன்று எதனைப்பற்றிய அறிவும் இல்லாததால் அவைகளுக்குப் பயந்து, சற்று அடிமைத்தனம் காட்டவேண்டி அவ்வவற்றை வணங்கத் துவங்கியிருக்கவேண்டும். தன் உயிர்வாழ்தலுக்கான தந்திரம் இது. வலியோன் முன் எளியோன் சற்று பணிவுடன் நடந்து கொள்வதைப்போன்றதே இது. ஒரு பொய்மை நம் கண்முன்னே திரும்பத் திரும்ப நிகழ்த்தப்பெறும்போது, நாளடைவில் நம் மனது அதனை உண்மையெனவே கருதிக்கொள்ளும். அப்படி வணங்கத் துவங்கிய சிலரைக் கண்டு பின் வந்த அனைவரும் அதனையேத் தொடர்ந்தனர்.

இங்கு ஒரு சிறிய கதை. ஆசிரமம் ஒன்று. தலைமைக்குருவும் சில சீடர்களும் அங்குண்டு. குருவானவர் ஆசிரமத்தில் ஒரு பூனை வளர்த்துவந்தார். யாகம் வளர்க்கும்பொழுதெல்லாம் அப்பூனை குறுக்கும் நெடுக்குமாக ஓடி யாகத்திற்கு இடைஞ்சல் கொடுத்துக்கொண்டிருந்தது. குரு சீடர்களிடம் அதனைப் பிடித்து தூணில் கட்டுமாறு உத்தரவிட்டார். இது ஒவ்வொரு முறையும் தொடர்ந்தது. யாகம் வளர்க்கும்போதெல்லாம் பூனையின் தொந்தரவு கருதி அதனைத் தூணில் கட்டிப்போடுவதும் பின் கட்டவிழ்த்துவிடுவதும். ஒரு சமயம் குரு இறந்து விட்டார். பூனையும் இறந்துவிட்டது. அடுத்துள்ள தலைமைச் சீடன் குருவானான். அவன் தலைமையில் முதல் யாகம் நிகழ்த்தப் போகின்றார்கள். எல்லாம் தயாராகிவிட்டது என்று யாகத்தினைத் துவக்கப்போகும் வேலையில் குருவான தலைமைச்சீடன் சத்தமிட்டான், "மூடர்களே, நிறுத்துங்கள், பூனை எங்கே? யாகம் நிகழ்த்தும்பொழுது ஒரு பூனையைத் தூணில் கட்டவேண்டும் என்று தெரியாதா? அப்படிச் செய்யாவிட்டால் எப்படி யாகம் முழுமைபெறும்? போய் உடனே எங்கிருந்தாலும் ஒரு பூனையைப் பிடித்து வந்து தூணில் கட்டுங்கள்."

கதையென்றாலும், கதையின் எதார்த்தமும் பொருளும் புரிகின்றதுதானே? அப்படியொரு செம்மறியாடுகள் நிலைமையில் ஒரே சிந்தனையில் மக்கள் இருக்கும்பொழுது அவர்களில் இருவர் மட்டும் தனித்ததொரு சிந்தனை கொண்டு தோன்றியிருக்க வேண்டும். அது எப்படி என்கிறீர்களா? தவறுகளால் பிறந்தவன் மனிதன் என்று சொல்வோமே அதற்கு நாம் கொண்ட பொருள் (அட, நம்பிக்கைகள் - கொண்டதும் நின்றதும் பகுதியில் பதிந்திருக்கலாமோ?) ஆதாமும், ஏவாளும் புரிந்த தவறுகளால் பிறந்தவன் என்று எண்ணிக்கொண்டிருக்கின்றோம். உயிரினங்களில் செல் பிரிதல் (Cell Mutation) என்றொரு தொடர் நிகழ்வு ஒன்று நடந்து கொண்டிருக்கும். ஒரு உயிரினத்தின் செல் இரண்டாகப் பிரிந்து இரண்டு அதே உயிரினத்தின் செல்களாகவே மாறும். வெகு சில சமயங்களில் இந்தச் செல்பிரிகையில் தவறுகள் ஏற்பட்டு குறைபாட்டுடனோ அல்லது அதிகப்படியான மாற்றத்தோடோ புதுவகை உயிரினம் போன்று மாறுபட்டுத் தோன்றவும் வாய்ப்புக்களுள்ளது. பல மில்லியன் வருடங்களுக்கு ஒருமுறை இப்படி ஏற்படும் தவறுகளாலேயே பல்வேறு உயிரினங்களின் தோற்றம் நிகழ்ந்துள்ளதாக அறிவியல் அறிஞர்கள் கூறுவர். அதுபோன்றதொரு தவறுகளாலேயே மனிதனும் தோன்றியதாக அறிவியிற்கூற்று.

இப்பொழுது அந்த இருவரைக் கவனிப்போம். செம்மறியாடுகளைப்போன்ற நிலையில் இருக்கும்பொழுது, ஏன் இப்படி முட்டாளாக இருக்கின்றோம்? என்று எண்ணிய முதலாமவன், தனித்துச் சிந்திக்கத் துவங்குகின்றான். தன் சிந்தனையில் உதித்தவைகளை ஏனைய மக்கள் முன் எடுத்து வைக்கின்றான். பழமையில் ஊறிய அவர்கள் புதுமையை எளிதில் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். புதிய சிந்தனை உடையவனைத் தம்மிலிருந்து தனிப்படுத்திப் பார்க்கத் துவங்குகின்றனர்.

அப்பொழுது, இதனைக் கவனித்த மற்றொருவனுக்கும் இதன் உண்மை புரிந்தது என்றாலும், மக்களின் மூடத்தனைத்தை தனது மூலதனமாக்கி, அதற்குத் தானே காவலனாகவும் மாறி தன் வாழ்க்கையையும் தன் சந்ததியினரின் வாழ்க்கையையும் வளம்பட மாற்றிக்கொள்ள முற்பட்டான். அதில் வெற்றியும் கண்டான். முதலாமவனுக்கு எதிராக அனைவரையும் திருப்பினான். தனிப்பட்டதொரு சிந்தனையே தவறானது எனவொரு கொள்கையும் வகுக்கப்பட்டது. இவன் சொல்வதே வேதம் எனப்பட்டது. வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்பது உண்மையானது.

இப்படியான அந்த இரண்டாமவன் ஒவ்வொரு கூட்டத்தாரிலும் உருவாகியிருக்க வேண்டும், அல்லது படையெடுப்பில் அடுத்தகூட்டத்தாருக்கு இம்முறை புகுத்தப்பட்டிருக்க வேண்டும். எப்படியோ, மக்கள் பலரின் அறியாமையை சிலர் பயன்படுத்திக்கொள்ளும் தந்திரங்கள் உருவாகிவிட்டன. அவற்றை நிலைப்படுத்திக்கொள்ள ஆளுமைக் குணம் கொண்டோரின் உதவியையும் நாடியது தனி.

பிறிதொரு சமயம் தொடர்வோமே...
------------------------------------------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment