தமிழ்க் கடலில் முத்தெடுப்போம்...
தமிழில் ஏராளமான இலக்கியங்கள் உள்ளன. உங்கள் வாழ்நாள் முழுமையையும் இலக்கியம் வாசிக்கத் தயார் என்று காலவரிசைப்படி எடுத்து அமர்வீர்கள் என்றால் உங்களுக்கு ஆயுள் போதாது. அதுவுமில்லாமல் அந்தந்த இலக்கியச் செல்வங்களில் மூழ்கி முத்தெடுக்க முனையும்போது, அதன் இனிமைக்குள் மயங்கி, கடந்து செல்வதை மறந்துவிடுவீர்கள்.
திருக்குறளைக் கடந்து வருவதற்கே உங்களுக்கு ஓராண்டு தேவைப்படலாம். ஒவ்வொரு குறளும் புதிது புதிதாகப் பொருள் விளக்கமாகிக்கொண்டே இருக்கும். அண்மையில் நான் திருக்குறளுக்கு உரையெழுதும் பணியில் ஈடுபட்டிருந்தபோது என்னை நாள்கணக்கில் நிறுத்தி வைத்த குறள்கள் பல.
‘பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோ நம் பெண்மை உடைக்கும் படை’ என்ற குறளைக் கண்டதும் நான் திகைத்துப் போய்விட்டேன். இந்தக் குறள்கள் அடிக்கடி எடுத்தாளப்பெற்று நமக்குப் பழக்கமாகியிருக்கவில்லை.
‘பல மாயங்கள் புரிகின்ற கள்வன், திருடன் இவன். அதற்கெல்லாம் பெண்ணாகிய நாம் அஞ்சமாட்டோம். யாம் நற்குணங்கள் என்னும் கோட்டையைக் கட்டி எழுப்பி அதில் அரசியாக வீற்றிருக்கிறோம். இவன் இங்கே வந்து என்ன செய்துவிட முடியும் ? ஏதேனும் சிறுபொருள் திருடிச் செல்லமுடியும். என் சிறு கவனத்தைக் கவரமுடியும். மற்றபடி என்னைக் கவர்ந்துவிட முடியுமோ இவனால் ? ஆனால், எத்தனை தூரம் பணிந்து இணக்கமாக இழைவாகப் பேசுகிறான் ? அந்தப் பணிந்த மொழிகள் என் பெண்மை என்னும் கோட்டையை உடைத்துவிடும்போல் உள்ளனவே. கோட்டையைக் கொத்தி உடைக்கிறானே, அது ஒன்றல்ல இரண்டல்ல படைகளாய்ப் பெருகித் தாக்குகின்றனவே’ என்று பொருள் விரியும்போது நான் வியந்து அமர்ந்துவிட்டேன். எண்ணி எண்ணி மகிழ்ந்துகொண்டிருந்தேன்.
அதுபோல்தான் தமிழில் உள்ள இலக்கியங்கள் எல்லாமே. அவை பழைய கள். உன்மத்தத்தின் அளவை அளக்க இதுகாறும் அளவுமானி எதுவும் தோன்றவில்லை.
அதனால்தான் பாரதிதாசன் தமிழின் அருமையை இவ்வாறு பாடியிருக்கிறார்.
கனியிடை ஏறிய சுளையும் – முற்றல்
கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும் – காய்ச்சும்
பாகிடை ஏறிய சுவையும்
நனிபசு பொழியும் பாலும் – தென்னை
நல்கிய குளிரிள நீரும்
இனியன என்பேன் எனினும் – தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்.
தமிழின் பழைமையைக் கருத்தில்கொண்டு திரும்பினால் எண்ணற்ற இலக்கிய வகைகள் இருக்கின்றன. சங்கப் பாடல்கள், ஐம்பெருங்காப்பியங்கள், கம்ப இராமாயணம், பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், சித்தர் பாடல்கள், தனிப்பாடல்கள் என அவை ஏராளம்.
சங்கப் பாடல்களை உங்கள் வாழ்வில் கற்பதற்கு வாய்த்தால் அது பெரும்பாக்கியம். ஒவ்வொரு பாடலையும் அணு அணுவாகப் புரிந்துகொள்ளும்போது உங்களுக்குள் ஏற்படும் தெளிவு வேறுவகை. ஐம்பெருங்காப்பியங்களைக் கற்றீர்கள் என்றால் எண்ணற்ற நிலங்களின் வழியே இரண்டாயிரமாண்டுப் பழந்தமிழர்களோடு வாழ்ந்துவிடுவீர்கள். கம்ப இராமாயணத்தைப் படித்துத் தமிழின் முழுமையை உணரலாம். அற இலக்கியங்களைப் பயின்றால் இத்தனை நீதிகளை வகுத்துக்கொண்ட, இந்த மொழி மாந்தர்கள் வழியில் நாமும் தோன்றியிருக்கின்றோமா என்ற செம்மாப்பு தோன்றும். தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று’ என்று பாடிய மரபை உடையவர்களாயிற்றே நாம். தனிப்பாடல்களில் இல்லாத சுவையே இல்லை எனலாம். இன்றெல்லாம் யாருக்காவது சிலேடை என்றால் என்னவென்று தெரியுமா என்று அஞ்சுகிறேன். தனிப்பாடல்களில் காணப்படும் காளமேகப் புலவர் தமிழின் பெரும்புலவர்களில் ஒருவர்
கத்துக் கடல்சூழ் நாகைக் காத்தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போது அரிசிவரும் - குத்தி
உலையிலிட ஊரடங்கும் ஓரகப்பை அன்னம்
இலையிலிட வெள்ளி எழும்
-என்று சிலேடையாகப் பாடிய வரிகள் நினைவுக்கு வருகின்றன. பிச்சை பெற்று அன்னம் உண்கின்ற இடத்தில் எழுந்த கோபத்தை அடக்கமாட்டாமல் இருபொருள்படப் பேசிய அப்புலவன் யாருக்கும் தலைவணங்கியிருக்கமாட்டான் என்றே நம்புகிறேன்.
எப்படிப் பார்த்தாலும் தமிழ் மரபில் ஆயிரக்கணக்கான புலவர்கள் செய்யுள் எழுதியிருக்கிறார்கள். நம் கைவசம் இலட்சக்கணக்கான பாடல்கள் உள்ளன. பல இலட்சக்கணக்கான பாடல்களைக் காலத்தின் கறையானிடம் தின்னக் கொடுத்தபின்னும் நமக்கு மீதமிருப்பவற்றை வாசித்து அடங்க ஒருவனின் ஆயுள் போதாது என்றால் நம் செல்வங்களின் பேரளவை நினைத்துப் பார்க்கலாம்.
இவற்றில் ஒரு பிரிவாகச் சிற்றிலக்கியங்கள் உள்ளன.
இலக்கியம் என்றால் இலக்கியம்தான், அதிலென்ன சிற்றிலக்கியம் பேரிலக்கியம் ? ஒருபொருள் சார்ந்து - அதைத் தமிழில் துறை என்கிறார்கள் – இயன்றவரை விரிவாக அல்லது முடிந்தவரை சுருக்கமாக இலக்கணம் வகுத்த வழியின்படி பாடிச் செல்கின்ற இலக்கியங்கள் அவை. வாய்ப்பாட்டாகப் பாடி முடிக்கும்போது ஓரமர்வில் ஒருபொழுதில் தொடங்கி அடங்குகிற இலக்கிய வடிவம்.
தாலாட்டுப் பாட்டு இருக்கிறது, பிள்ளை தூங்கியபின்பு யாராவது பாடுவார்களா ? ஒப்பாரிப் பாட்டு இருக்கிறது, செத்து சவ அடக்கம் செய்து 16 நாள்கள் கழிந்த பின்னால் யாராவது ஒப்பாரி வைத்துக்கொண்டு இருப்பார்களா ? அம்மாதிரிதாம் சிற்றிலக்கியங்களும்.
அந்தக் காலங்களில் அதற்கு நிகழ்கலைத் தன்மை இருந்திருக்கிறது. ‘பாடுய்யா பார்ப்போம்’ என்று வள்ளல்கள் சொல்ல, புலவர் பாடியிருக்கிறார். அப்படிப் பாடும்போது ‘அட... வீணாப் போனவரே.. விளங்காமப் போனவரே’ என்றா பாடமுடியும் ? நீர் நல்லவர், வல்லவர், நடையழகர், சிரிப்பழகர் - என்றெல்லாம் பாடிப் பரிசில் வாங்கிச் செல்வர்.
புகழ்வது, ஒன்றில் ஏற்றிப் பாடுவது, கற்பனைக்கு மொழி வடிவம் தருவது - அந்தக் காலத்தில் அருமையான செயல். இன்றைய நிலைமையை வைத்தெல்லாம் இதை இழிந்துபேச முடியாது என்பதே என் கருத்து. பால்ய விவாகத்திலிருந்து விடுபட்டதும், உடன்கட்டை ஏறும் வழக்கை ஒழிக்கப் பாடுபட்டதும் நம் காலத்துக்குச் சற்று முந்திதானே நடந்தன ? அப்படிப் பாடப்பட்டவை சிற்றிலக்கியங்களாக நம்முன் கிடக்கின்றன.
இறைவனை அரசனை மற்றும் சக மனிதர்களை அவர்களின் செந்தகைமை வியந்து பாடியிருக்கின்றார்கள். அதில் பாடப்பெற்றுள்ள தகைமையுடையவர் நிச்சயமாக வாழ்ந்திருப்பார் என்றே நம்புகிறேன். அதில் வருகின்ற ஊரும் இயற்கையும் தாவரங்களும் விலங்குகளும் காடுகளும் நிலங்களும் அதே செழுமையோடு குன்றாத வளத்துடன் இருந்திருக்கும் என்றே நம்புகிறேன். நாம் வாழ்கின்ற இந்தக் காலத்திலேயே மழை பொழிகின்றது என்னும்போது அந்தக் கால வாழ்வு அப்படியொன்றும் இழிந்ததாக இருந்திருக்காது. அதில் இலங்குகின்ற தமிழும் பண்பாட்டுத் தகவல்களும் மிகமிக முக்கியமானவை.
தமிழில் இப்போது எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்களுக்கு உள்ள சிக்கல் என்னவென்றால் பழந்தமிழ் இலக்கியங்களோடு அவர்களுக்கு எந்தப் பரிச்சயம் இல்லை. அதிகபட்சம் திருக்குறள் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. பத்திருபது வருடங்களுக்கு முன்பெல்லாம் நிலைமை இப்படியில்லை. சுஜாதா சங்க இலக்கியங்களுக்கு உரையெழுத முயன்றார். ஜெயகாந்தன் கம்பனைப் பற்றி மிகச் சிறப்பாக அறிந்தவர். கடைசியில் இன்றெழுதப்படுகிற கவிதைகளைக்கூட யாரும் படிப்பதில்லை என்னும் நிலைமை வந்துவிட்டது.
நாஞ்சில் நாடன் இதற்கு விதிவிலக்காகத் திகழ்கிறார். அவர் தேர்ந்துள்ள புனைகதை மற்றும் வாழ்வியற்கூறுகளை விவரிக்கும் கட்டுரையுலகுக்கு இது முற்றாக வேறானதுதான். இதையெழுதும் நேரத்தில் ஒரு நாவலை எழுதிப் புகழ் சம்பாதிக்கும் செயலில் அவர் இறங்கியிருக்கலாம். இத்தனைக்கும் ஒரு நாவல் எழுதுவதைக் காட்டிலும் அதிக உழைப்பைக் கோருகிற பணி இது. 98க்குப் பின்பாக அவர் புதினம் எதையும் எழுதியதாகத் தெரியவில்லை. ஏதேனுமொரு நற்செயலை இந்தச் சமூகத்திற்கு உருப்படியாகச் செய்து தரவேண்டும் என்று ஆசையுற்றதால்தான் இத்தகைய முயற்சியிலேயே ஈடுபட்டிருக்கவேண்டும். இந்தக் காரணத்திற்காகவே அவரை அவர் ஆசைப்படுவதுபோல அழைக்கக் கடமைப்பட்டுள்ளோம். நாஞ்சில் நாட்டு வீரநாராயண மங்கலத்து ஓரேர் உழவர் ஸ்ரீ கணிபதிபிள்ளை மகனார் நாஞ்சில் நாடனார்.
பழந்தமிழ் இலக்கியங்களைப் படிப்பது கடும்பணி. அதற்கு முறையான பயிற்சி வேண்டும். நானும் படிக்கிறேன் என்றெல்லாம் படித்துவிடமுடியாது. பிடிபடாது. மறைமலை அடிகள் சொல்வதுபோல் பதின்பருவத்திலிருந்தே தொல்காப்பியத்தோடும் திருக்குறளோடும் மனனப் பயிற்சி இருக்கவேண்டும். அப்பொழுதுதான் பழந்தமிழ்ப் பிரயோகங்கள் உங்களை வெளித்தள்ளாமல் உள்ளிழுத்துத் தம் அழகுகளைக் காட்டும்.
நாஞ்சில் நாடனுக்கும் இளமை முதல் பழந்தமிழ் இலக்கியங்களோடு ஆழ்ந்த வாசக நெருக்கம் இருந்திருக்கிறது. புனைகதை உலகில் இயங்கிக்கொண்டே அவற்றோடு நல்லுறவு பேணியிருக்கிறார் என்பதற்கான எல்லாத் தடயங்களும் இந்நூலில் உள்ளன. இல்லாவிட்டால் இதில் மூழ்கி முத்தெடுக்க முடியாது. ஒவ்வொரு நூலாகத் தேடிச்சென்று, நண்பர்களின் நூலக அடுக்குகளைத் தூசியெழத் தட்டி, ஒவ்வொருவருவரிடத்திலும் வாய்விட்டுக் கேட்டுப் பெற்று அவற்றை மெனக்கெட்டு வாசித்துப் பொருள் புரிந்து - இந்த நூலை எழுதியிருக்கிறார். தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் குறித்துத் திரண்ட தகவல்களோடு நிரல்பட எழுதப்பட்ட ஒரே நூல் என்று இதைத்தான் கூற வேண்டும்.
தமிழ் இலக்கணப் பத்திகளை நான் இணையத்தில் எழுதுவதுண்டு. இதெல்லாம் நம் வேலையில்லை, தகுதிவாய்ந்த புலவர்கள் பண்டிதர்கள் எத்தனையோ பேர் இருக்க, நமக்கெதற்கு இந்த வேலை என்று கருதியிருந்தேன். ஆனால், இதைச் செய்வதற்குக் கூட தகுதிவாய்ந்த உரிய நபர்கள் இல்லை என்பதை உணர்ந்தபோதுதான் நம் முன்னோர்கள் நம்மிடம் பொறுப்பை வழங்கிச் சென்றுவிட்டார்கள் என்பதையே உணர்ந்தேன்.
நாஞ்சில் நாடன் அஞ்சுவதுபோல் அவர் படித்த கலம்பகமும் சதகமும் அந்தாதியும் பிள்ளைத்தமிழும் பள்ளுவும் மறு அச்சுக்கு வாய்ப்பில்லாதவை என்றே கருதுகிறேன். அவற்றையெல்லாம் மின்பிரதிகளாக இணையத்தில் ஏற்றிச் சேமித்து வைக்கவேண்டும் என்று என் யோசனையைத் தெரிவிக்கிறேன். அதற்கு யாரேனும் அரசோ, பல்கலைக் கழகமோ, புரவலரோ நடவடிக்கை எடுத்தால் சிறப்பாக இருக்கும். கைவசமுள்ள நூல்களைப் படியெடுத்து இணையத்தில் ஏற்றவேண்டும். அதிகபட்சம் இதற்குச் சில மாதங்கள் தேவைப்படலாம். மனம் வேண்டும் என்பதுதான் முக்கியம் !
(கடந்த பிப்ரவரி 22, 2014 அன்று ஈரோடு வாசிப்பு இயக்கம் நடத்திய பனுவல் போற்றுதும்’ நிகழ்ச்சியில் நாஞ்சில் நாடன் எழுதிய ‘சிற்றிலக்கியங்கள்’ என்னும் நூல் குறித்து நான் ஆற்றிய உரை).
வழிகாட்டுபவர் :https://www.facebook.com/magudeswaran.govindharajan/posts/676271952411297
No comments:
Post a Comment