Monday, February 3, 2014

தமிழ் அமுதம்.

திருவிளையாடல்.

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே.

(குறுந்தொகை-2; திணை : குறிஞ்சித்திணை; எழுதியவர் : இறையனார்)

தலைவன் தலைவியிடையே ஒரு சமயம் புணர்தல் தற்செயலாக, வெகு இயல்பாக முதல் முறை நிகழ்ந்து விடுகின்றது. அதற்குப் பின் அவர்கள் கூட வாய்ப்பு அமையவேயில்லை. சில காலம் சென்று மீண்டுமொருமுறை அப்படி ஒரு வாய்ப்பு அமைகின்றது. ஆனால், கடந்த முறை நிகழ்ந்த நிகழ்வு நினைவிற்கு வந்து தலைவியால் தலைவன் முகத்தை பார்க்கக் கூசி நாணத்தால் தலை கவிழ்ந்து தள்ளி நிற்கிறாள்.

அவள் நாணத்தைப் போக்கிட அவளைத் தொடவேண்டும். இதனை மெய் தொட்டுப் பயிறல் என்பர். என்ன காரணத்தைச் சொல்லி அவளைத் தொடுவது? தலைவன் சொல்கிறான், அவளது கூந்தல் நறுமணம் கொண்ட பூவைப் போன்று இருக்கின்றதாம். அதனையும் கற்பனைவளம் சேர்த்துச் சொல்கிறான். ஒரு வண்டு அவளது கூந்தலை மொய்க்க வருகின்றதாம். அதனிடம் அவன் கேட்பது போல்...

தேடிப் பல மலர்கள் சென்று தேர்ந்து தேன் உண்ணும் அழகிய சிறகுகளை உடைய வண்டே, நான் கேட்கிறேன் என்பதற்காக, என் விருப்பத்திற்காகச் சொல்ல வேண்டாம், உள்ளதை உள்ளபடியே சொல். இவள் பல பிறவிகளிலும் என்னுடன் இணைந்தே இருப்பவள். மயில் போன்று அழகானவள். (மயிலின் தோகையைப் போன்ற கூந்தலைக் கொண்டவள்.) இடைவெளியற்ற சீரான நெருக்கமான அழகான பற்களை உடையவள். என் காதலி. அவளின் கூந்தலைப் போன்று நறுமணம் வீசக்கூடிய மலரை நீ எங்காவது இருக்கின்றது என்று அறிந்ததுண்டா..?

என்று கேட்டவாறே, அந்த வண்டை விரட்டுவது போன்று பாவனை செய்து அவளது கூந்தலைத் தொட்டுத் தடவிப் பின் அவளை அணைக்கிறான். நாணம் விலகிட அடுத்த புணர்தல் நிகழ்கின்றது. தலைவியின் நலத்தைப் பாராட்டிப் பாடுவது போலமைந்திருப்பதைப் போன்றே திருக்குறளிலும் நலம் புனைந்துரைத்தல் என்று ஒரு அதிகாரமே இருக்கின்றது. அதனைப் பின்பொரு முறைச் சுவைப்போம்.

அருஞ்சொற்பொருள்:

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி

கொங்கு - தேன்
தேர் - ஆராய்ந்து, தேர்ந்து
அஞ்சிறை - அழகிய சிறகுகள்
தும்பி - வண்டு

தேர்ந்து தேனுண்ணும் வாழ்க்கையையுடய, அழகிய சிறகுகளை உடைய வண்டே,

காமம் செப்பாது கண்டது மொழிமோ

காமம் - விருப்பம்
செப்பாது - சொல்லாது
மொழிமோ - சொல்வாயாக

எனது விருப்பத்திற்காகச் சொல்லாது கண்டதை மட்டுமே சொல்வாயாக.

பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்

பயிலியது கெழீஇய - பல பிறவிகளிலும் என்னோடு இணைந்திருந்த
மயிலியற் - மயில் போன்ற இயல்பினள்

பலபிறவிகளிலும் என்னோடு இணைந்தே வருபவள் இவள், மயிலின் சாயலைக் கொண்டவள்,

செறி எயிற்று அரிவை கூந்தலின்

செறி எயிற்று - செறிவான நெருங்கிய பற்களைக் கொண்ட
அரிவை - பெண்
கூந்தலின் - கூந்தலைப் போன்ற

செறிவான நெருங்கிய பற்களைக் கொண்டு இந்தப் பெண்ணின் கூந்தலைப் போன்ற

நறியவும் உளவோநீ யறியும் பூவே

நறியவும் - நறுமணம் உள்ளதுமான
உளவோ - இருக்கின்றதோ?

நறுமணம் உள்ளதுமான பூ ஏதும் இருக்கின்றதோ நீ அறிந்தவரையில்?

தேர்ந்து தேனுண்ணும் வாழ்க்கையையுடய, அழகிய சிறகுகளை உடைய வண்டே,
எனது விருப்பத்திற்காகச் சொல்லாது கண்டதை மட்டுமே சொல்வாயாக.
பலபிறவிகளிலும் என்னோடு இணைந்தே வருபவள் இவள், மயிலின் சாயலைக் கொண்டவள்,
செறிவான நெருங்கிய பற்களைக் கொண்டு இந்தப் பெண்ணின் கூந்தலைப் போன்ற
நறுமணம் உள்ளதுமான பூ ஏதும் இருக்கின்றதோ நீ அறிந்தவரையில்?

இந்தப் பாடலைத்தான், திருவிளையாடல் என்ற திரைப்படத்தில் மதுரை மன்னன் செண்பகப்பாண்டியனின் சந்தேகத்தைத் தீர்ப்பதற்காக சிவபெருமான் தருமிக்கு எழுதிக்கொடுத்த பாடலாகப் பயன்படுத்தியிருப்பார்கள்.

இப்ப நம்ம பக்கத்துக்கு வருவோம்...

இந்தச் சிவபெருமான் சரியான குசும்பு பிடிச்சவருங்க. (என்னைய மாதிரியே) பாட்டையும் தப்பா எழுதிக்கொடுத்துட்டு... கேட்டா அதைச் சமாளிக்கிறதுக்காக... உம் தமிழுடன் விளையாடவே யாம் வந்தோம்னு டகால்டி விடுறது... அதுக்கு முன்னாடி, என்னாமா... வசனம் பேசிச் சண்டை போடுவாரு...

நடந்தது நடவாதது, அறிந்தது அறியாதது, தெரிந்தது தெரியாதது, பிறந்தது பிறவாதது, இறந்தது இறவாதது என அனைத்தையும் யாம் அறிவோம். எல்லா....ம் எமக்கு தெரியும்...னு சொன்னதை அப்டீயே மெயிண்டைன் பண்ணிருவாரு... செம கில்லாடிங்க அவரு...

படம் எடுக்கப்பட்ட தளம் : http://www.guna thamizh.com/2010/01/blog-post_24.html

No comments:

Post a Comment