Saturday, October 19, 2013

அடக் கடவுளே!

அடக் கடவுளே!

நான் சமீபத்தில் ஒரு இந்திப் படம் பார்த்தேன். அந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஆனால், இது வழக்கமான சினிமா விமர்சனம் அல்ல. காரணம், நான் பார்த்தது வழக்கமாக நாம் பார்க்கும் படம் அல்ல...

ஓ மை காட் (OH MY GOD) எனும் புதிய இந்திப் படத்தில் கதாநாயகன், நாயகி, டூயட், காதல் காட்சிகள், செக்ஸ் என்று எதுவுமில்லை. குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இப்படம் இரண்டே வாரத்தில் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருக்கிறது.

இந்த கதையின் நாயகன் காஞ்சிலால் மெஹ்தா, ஒரு நாத்திகன். துளிகூட கடவுள் நம்பிக்கை யில்லாதவன். சமயம் கிடைக்கும் போதெல்லாம் மற்றவர்களின் மூடநம்பிக்கைகளை எள்ளி நகையாடுவான். கடும் மழை பெய்த ஒருபொழுதில் இவனது கடை சிதைந்து போகிறது. உள்ளேயிருந்ததோ ரூ.40 லட்சம் மதிப்புமிக்க கடவுள் சிலைகள். எல்லாம் நாசம். நல்லவேளை, கடையை ஒரு கோடி ரூபாய்க்கு இன்ஷ்யூரன்ஸ் செய்திருக்கிறான். அந்த காப்பீட்டு தொகையை கேட்டு இன்ஷ்யூரன்ஸ் கம்பெனியை அணுக, அவர்கள் பணம் தர மறுக்கிறார்கள். புயல், மழை, பூகம்பம், சுனாமி இவைகளால் பாதிக்கப்பட்டால் இன்ஷ்யூரன்ஸ் பணம் கிடைக்காது. காரணம், இவை Act of GOD (கடவுளின் செயல்) ஆம்! இந்த விஷயம் காப்பீட்டு ஒப்பந்தத்தில் இருக்கிறதாம்.

அவ்வளவுதான். கடவுள் நம்பிக்கையில்லாத காஞ்சிலால் மெஹ்தா கடவுள் மீது வழக்கு போடுகிறார். கடவுள் இருந்தால்தானே நேரில் வருவார் என்கிறார். கடவுளின் பெயரால் இந்தியாவில் பிரபலமான மூன்று சாதுக்களின் மடங்களுக்கு நோட்டீஸ் பறக்கிறது. அவர்கள் கோர்ட்டில் ஆஜராகிறார்கள். காஞ்சிலால் மெஹ்தாவிற்கு ஆதரவாக யாரும் வாதாட மறுப்பதால் அவரே கோர்ட்டில் வாதாடுகிறார்.

இந்த வழக்கு விஷயம் தொலைக்காட்சி சேனல்கள் மூலம் பிரபலமாக, இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மற்ற மத மக்களும் காஞ்சிலால்உடன் சேர்ந்து போராட, இஸ்லாமிய மத அறிஞர்களும், கிறிஸ்துவ பாதிரியார்களும் கோர்ட்டுக்கு வருகின்றனர்.

இந்த இயற்கை பேரழிவுகளுக்கு எங்க கடவுள் காரணமில்லை... அவன் கருணைமிக்கவன், என்கிறார் இந்து சாமியாரான ஹித்தேஷ்வர் மஹராஜ்.

அப்ப எங்க கடவுளுக்கு மட்டும் கருணையில்லையா? என்று மௌல்வியும், பாதரும் ஆவேசப்பட, யாருடைய கடவுள் இந்த பேரழிவுகளை செஞ்சதுன்னு நீங்களே முடிவு கட்டிக் கொள்ளுங்கள், என்கிறார் காஞ்சிலால் மெஹ்தா.

ஒரு கோடி கேட்டு ஒரு தனிநபரால் தொடரப்பட்ட வழக்கு, மற்றவர்களும் அதில் சேர்ந்து கொள்ள 400 கோடி தரவேண்டிய நிர்பந்தம் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனிக்கு. அதனால் இது கடவுளின் செயல்தான் என்பதை நிரூபிக்க அவர்கள் போராடுகிறார்கள். இது கடவுள் செயல் அல்ல என்று மதகுருமார்கள் கூறுகிறார்கள்.

வேத புத்தகங்களை ஆதாரமாக வைத்து இயற்கை பேரழிவுகளுக்கு கடவுள்தான் காரணம் என்பதை கோர்ட்டில் நிரூபிக்கும் காஞ்சிலால் மெஹ்தாவிற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் 400 கோடியை இந்து மத பீடங்கள் தர முடிவு செய்கின்றன. இந்த முடிவுக்கு பின்னணியாக அவர்கள் முன்வைக்கும் காரணம் அதிர்ச்சிகரமான கிளைமேக்ஸாக நம் முன் விரிகிறது.

காஞ்சிலால் மெஹ்தாவை கொன்று, அவரையும் கடவுளாக்கி அதன்மூலம் 400 கோடியை ஒரே வருடத்தில் சம்பாதித்துவிட அவர்கள் திட்டமிடுகிறார்கள். அது நடந்ததா, இல்லையா என்பதே இறுதிக்காட்சி.

இந்தப் படத்தை முதல் முறையாக பார்த்தபோது நான் மிரண்டு போனேன். ஒருவேளை தந்தை பெரியார் இப்படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறாரோ என்று நினைக்கத் தோன்றும் வசனங்கள். ஒரு காட்சிக்கும் இன்னொரு காட்சிக்கும் வசனங்களை கவனிக்க தவறினால் நஷ்டம்தான். அப்படி ஒரு பகடி படம் முழுக்க நிறைந்திருக்கிறது. கடவுளைப்பற்றியும், மூடநம்பிக்கைகளையும் படம் முழுக்க, ஒவ்வொரு காட்சியிலும் எள்ளி நகையாடியிருக்கின்ற விதம், அதை நகைச்சுவையாக காட்டியிருக்கிற விதத்தினால் படம் ஆத்திகர்களையும் யோசிக்க வைக்கிறது. இதுதான் இந்தப் படத்தின் மிகப்பெரிய வெற்றி. ஆத்திகர்களின் மனம் புண்படாதபடி நாத்திகக் கருத்துக்கள் அவர்களே ஏற்றுக்கொள்ளும்படி செய்ததற்கு படத்தை எழுதி இயக்கிய அறிமுக இயக்குநர் உமேஷ் சுக்லாவிற்கு பாராட்டுகள்... இந்தப் படத்தை பற்றி தமிழ் மக்களுக்கு சொல்வதற்காக இப்படத்தை தொடர்ந்து பலமுறை பார்த்தேன். ஒவ்வொருமுறையும் மக்கள் கூட்டம் தியேட்டரில் அதிகமானது. இந்திய சினிமாவில் கடவுளை போற்றி, மூடநம்பிக்கைகளை வளர்க்கும்விதத்தில் எண்ணற்ற படங்கள் அதுவும் குறிப்பாக தமிழ் சினிமாவில் சொல்லவே தேவையில்லை. மிக அதிகளவில் பிற்போக்கு படங்கள் வந்துள்ளன. மூடநம்பிக்கைகளை, கடவுள் நம்பிக்கையை கேள்வி கேட்டு சில படங்களில் சில காட்சிகள் வரும்.

ஆனால், ஒரு படம் முழுக்க கடவுள் இருக்கிறானா? அவன் இருந்தால் நேரில் வரட்டும் என்று கேட்டபடி இரண்டு மணிநேரம் மக்களை தங்கள் நாற்காலியில் கட்டிப்போட்ட வித்தை நடக்கிறது என்றால்... அது இப்பொழுதுதான். இந்திய சினிமா பேசத்தொடங்கி 100 வருஷம் ஆகும் இந்தப்பொழுதில் முதல்முறையாக

அது உண்மையை பேசுகிறது ஓ மை காட்! படம் மூலமாக...

படத்தின் கதையின் நாயகனாக பரேஷ்ராவில் என்கிற இந்தி சினிமாவின் பிரபல நடிகர் நடித்திருக்கிறார். இவர் பெரிய ஹீரோ நடிகர் கிடையாது. ஆனால், திறமையுள்ள கேரக்டர் ஆர்ட்டிஸ்ட். காஞ்சி விருத் காஞ்சி என்று குஜராத்தியிலும், கிருஷ்ணன் Vs கஷ்ஹையா என்று இந்தியிலும் மேடை நாடகமாக இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் சக்கைபோடு போட்ட நாடகத்தின் சினிமா வடிவமே, ஓ மை காட்...

எப்பொழுதும் ஏதாவது சாப்பிட்டுக் கொண்டே இருக்கும் ஹித்தேஷ்வர் மஹராஜ், உண்ணாவிரதம் இருப்பதாக மக்களிடம் சொல்லிவிட்டு, டாய்லட்டிற்குள் சென்று சாப்பிடுவது, சாமியார்களின் போலி உலகத்தை தோலுரித்து காட்டுகிறது. லீலாதர் என்கிற சாமியாரின் காலடிபட்ட இடம் ஒன்றரை லட்சத்திற்கு பக்தர்களுக்கு விற்கப்படுகிறது. கோமி மய்யா எனும் பெண் சாமியார் எப்பொழுதும் மேக்கப் போட்டுக் கொள்வதிலேயே தன் பொழுதை கழிக்கிறார். மற்ற மதவாதிகளும் ஆத்திரப்படுபவர்களாகவும், அன்பு இல்லாதவர்களாக இருப்பதாகவும் படம் யதார்த்தமாக காட்டுகிறது.

ஹித்தேஷ்வர் மஹராஜை கிண்டல் செய்ய, இன்றும் ஒரு மணி நேரத்துக்கு கிருஷ்ணன் பால், வெண்ணை சாப்பிடப் போவதாக காஞ்சிலால் மெஹ்தா புரளியை கிளப்பிவிட, தேசமெங்கும் மக்கள் பால், வெண்ணை, மோர், தயிர் எடுத்துக்கொண்டு கிருஷ்ணன் சிலைகளிடம் அதை சாப்பிடச் சொல்லி கெஞ்சுவது, கொஞ்ச வருஷம் முன்பு பிள்ளையார் பால் குடித்ததை நினைவுபடுத்தியது.

மாணவர்கள் விளையாடும் கிரிக்கெட் மைதானத்தில் திடீரென முளைக்கும் அனுமான் கோயிலை, மாணவர்கள் போராடி தூக்கி விடுகின்றனர்.

தொலைக்காட்சி சேனல்கள் ABP காஞ்சிலால் மெஹ்தாவிடம் பேட்டி எடுக்க தொடர்ந்து வற்புறுத்த அவர் சம்மதித்து மக்களுடன் பேசுகிறார். அதில் கடவுளை நம்பியதால் தனக்கு வேலை கிடைத்ததாக சொல்லும் ஒரு இளைஞர், அதற்காக தான் மொட்டை அடித்தாக தனது மொட்டை தலையை காட்ட காஞ்சி கேட்கிறார்.

உன் வீட்டு வாசலில் அசிங்கமான மயிர், ஈறு பேன் டேண்ட்ரஃப் நரைத்த மயிர்கள் கிடந்தால் அது உனக்கு எப்படியிருக்கும்?
அசிங்கமான அருவெறுப்பாக இருக்கும், என்கிறார் இளைஞர். அப்ப அது கடவுளுக்கு மட்டும் எப்படி சந்தோஷமாக இருக்கும். அந்த மயிரால் கடவுளுக்கு லாபமில்லை. கோயில்களுக்கு அது வியாபாரம். இந்த மாதிரி காணிக்கையாக செலுத்தப்படும் மயிர் கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு வெளிநாடுகளுக்கு விற்கப்படுகிறது, என்கிறார் காஞ்சி.

மடாதிபதிகள் சார்பில் வாதாடும் வழக்கறிஞர், அதனால் கிடைக்கும் பணத்தில் கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள் கட்டப்படுகின்றன என்கிறார்.
வேறென்ன செய்ய முடியும். எல்லாம் கறுப்பு பணம். உங்களுக்கு அய்.டி. பிரச்சினையும் கிடையாது. குட்கா, பான்பராக் விற்று சம்பாதித்தவன் கேன்ஸர் ஆஸ்பத்திரி கட்டுவது போலத்தான் நீங்கள் செய்வதும்...., என்கிறார் காஞ்சி.

இன்னொரு காட்சியில், ஹித்தேஷ்வர் மஹாராஜை குறுக்கு விசாரணை செய்யும் காஞ்சி, உங்களுடைய மடாலயத்தைபற்றி விரிவாக சொல்லுங்கள்? என்கிறார்.

எங்கள் மடாலயம் 22 ஏக்கரில் அமைந்துள்ளது. 320 சிலைகள் உள்ளன. 122 பூசாரிகள் இருக்கின்றனர் என்று பெருமைப்படுகிறார்.

உங்கள் மடாலயத்திற்கு வெளியே எத்தனை பிச்சைக்காரர்கள் உள்ளனர் என்று தெரியுமா? அவர்களுக்கு மடாலயத்திற்குள் அனுமதிகூட கிடையாது. இந்த கோயில்கள் ஷாப்பிங் மால்கள். மதநம்பிக்கை எனும் பயத்தை காட்டி இவர்கள் வியாபாரம் செய்கிறார்கள் இந்த வியாபாரத்தில் Recession வருவது கிடையாது. இன்னும் சொல்லப்போனால் Recessionல்தான் இவர்களின் வியாபாரம் இன்றும் கொடிகட்டிப் பறக்கும்... என்கிறார் காஞ்சி.

அமர்நாத், வைஷ்ணவ தேவி கோயிலுக்கு புனித யாத்திரை செல்லும் பக்தர்களின் வாகனங்கள் விபத்துக்குள்ளாகி பலர் சாகிறார்கள். கடவுள் ஏன் அமைதியாக இருக்கிறார்? நாடெங்கும் நடக்கும் விபத்துகளில் கார், பஸ், வேன் எதில்தான் சாமி படம் இல்லை சொல்லுங்கள்... என்று கேட்கும்போது கோர்ட் மட்டுமா, அரங்கமே அதிர்ச்சியில் உறைகிறது.

கடவுளை பாராட்டிக்கொண்டே, வாழ்த்திக் கொண்டே ஜால்ரா போட்டா நம் காரியம் எப்படி நடக்கும்? நம்முடைய செயல்களின் விளைவே வாழ்க்கை. உழைச்சாதான் காசு. இல்லேண்ணா பட்டினி. ஜட்ஜ் அவர்களே... ஒருமுறை ஒரு கோயிலுக்கு சென்றேன். அங்கே மக்கள் வரிசையில் பால் செம்புடன் நின்றிருந்தனர். உள்ளே யாரோ பால் குடிக்கப் போகிறார்கள் என்று நானும் ஒரு செம்பு பாலுடன் வரிசையில் நின்றேன். கோயிலுக்குள் சென்றபின்தான் தெரிந்தது, உள்ளே பால் குடிக்கிறவர் யாருமில்லை. ஒரு கறுப்பு கல் மட்டுமே அங்கே இருந்தது... என்று காஞ்சி சொல்ல,

மடையனே. அது கல் கிடையாது. சிவலிங்கம்..., என்று ஆத்திரப்படுகிறார் ஹித்தேஷ்வர் மஹராஜ்.

அத்தனை பேரும் தாம் கொண்டு வந்த பாலை அந்தக் கல்மீது போட, அது வீணாக கால்வாயில் போய் விழுந்தது. ஒரு ஏழை நாட்டிற்கு, எத்தனையோ பேர் பசியுடன் இருக்கும் தேசத்திற்கு தினசரி எத்தனை லிட்டர் பால் இப்படி வீணாக கொட்டப்படு கிறதோ... நான் கொண்டு சென்ற பாலை இப்படி கொட்ட எனக்கு மனசு வரலே. பசித்த ஏழைக்கு அதை கொடுத்துட்டேன் என்று காஞ்சி சொல்ல, கோர்ட்டில் மட்டுமல்ல அரங்கிலும் பலத்த கைத்தட்டல்.

இப்படி கோர்ட்டில் தனது நாத்திகக் கருத்துகளை காஞ்சி தொடர்ந்து வைக்க, மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுகிறது.

சமஸ்கிருத மந்திரத்திற்கு அர்த்தம் கேட்டு பூசாரிகளிடம் கேள்வி கேட்க தொடங்குகின்றனர் மக்கள். சரியான அர்த்தம் சொன்னால்தான் காசு என்று கூற, திகைத்து போகின்றனர் பூசாரிகள்.

உடைந்து போன தனது கடையை வாங்க யாரும் முன்வராததை பார்க்கும் காஞ்சி சிரித்தபடி சொல்கிறார்:

உள்ளே சாமி சிலைகள் இருக்கு. 100 வருஷம் கழிச்சு அது வெளியே வந்தா, அந்த இடத்தோட மதிப்பு ஏறும். அங்கே கோயில் கட்டுவார்கள்....

இது சாதாரண ஒரு வசனம் அல்ல. சத்தியம். இந்த இடத்தில் நமக்கு ராமர் ஜென்ம பூமியின் நினைவுதான் வருகிறது. எவ்வளவு எளிமையாக, யதார்த்தமாக பாபர் மசூதியை இடித்ததை அந்த அக்கிரமத்தை வசனகர்த்தா சொல்லியிருக்கிறார் பாருங்கள்.

கடவுள், மதம், சாதி, சடங்கு, மூடநம்பிக்கைகள் மனிதன் மனிதனை பயமுறுத்த ஆரம்பித்தவை. அவை பிற்பாடு பெரிய வியாபார நிறுவனங்களாக மாறிவிட்டன. மக்களை நேசிப்பதே உண்மையான மதம். ஏழைகளுக்கு உதவுவதே உண்மையான மதம் என்று படம் முடியும்போது, கடவுளை மற, மனிதனை நினை, என்கிற தந்தை பெரியாரின் வாக்கியம் நினைவுக்கு வந்தது.

படத்தில் ஒரு காட்சியில், மக்கள் காஞ்சிலால் மெஹ்தாவின் நாத்திகக் கருத்துகளில் இருக்கும் நியாயத்தை ஏற்று பாராட்டும்போது, அவருடைய மகள் கண்கலங்கியபடி, பிகிசீ நிஹிசீஷி. ‘HAY GUYS. HE IS MY DAD,’ என்று பெருமைப்படுகிறாள்.

முகம் தெரியாத எனது சகோதரர்களான பரேஷ்ராவில், அக்ஷய் குமார், உமேஷ் சுக்லா இவர்களையும் நான் கண்கலங்கியபடி எண்ணி பெருமைப்படுகிறேன். அதேசமயம் பகுத்தறிவு பாதையிலிருந்து புறப்பட்டு, காட்சிகளை ஆரம்பித்து, சினிமாவை ஆட்டிப்படைத்து, ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்றியவர்கள் இங்கே என்ன செய்தார்கள் என்று நினைத்தால் வெட்கத்தில் தலைகுனிகிறேன்.

தன்னை பகுத்தறிவுவாதி, நாத்திகன் என்று கூறும் கமல்ஹாசன் ஏன் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கு ஆதரவாக ஹேராம், உன்னைப்போல் ஒருவன் படங்களை எடுத்தார் என்று யோசித்து பாருங்கள். இந்த நேர்மையான ஓ மை காட் படத்தை தமிழாக்கம் செய்து மக்கள்வரை சேர்க்க நாம் முயல வேண்டும்.

- அப்சல்

No comments:

Post a Comment